Published : 30 Nov 2016 09:09 AM
Last Updated : 30 Nov 2016 09:09 AM

உள்ளாட்சி 53: முன்னுதாரண பஞ்சாயத்துகளின் முதுகெலும்பை அறிவீர்களா?

அசத்தும் காந்தி கிராமம் பல்கலையின் அரசியல், அறிவியல் துறை!

மாணவர்களுக்கு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி ஊடகங்களுக்கும் பஞ்சாயத்து ராஜ்ஜியம் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறது அரசியல் அறிவியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை. தமிழகத்தில் முதல்முறையாக பஞ்சாயத்து ராஜ்ஜியம் குறித்து பத்திரிகை ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை நடத்தியது அந்தத் துறை. சென்னையில் நடந்த அந்த கருத்தரங்குக்கு பத்திரிகையாளரும் ‘தி இந்து’ குழுமத் தலைவருமான என்.ராம் தலைமை வகித்தார். அப்போது பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் பல்கலைக்கழகங்கள் பத்திரிகைகளுக்கு பிரசுரத்துக்கு அளிக்கும் பஞ்சாயத்துக்கள் தொடர்பான கட்டுரைகள் ஆய்வு கட்டுரைகளைப் போலவே இருப்பதால் அதனை பிரசுரிக்க இயலவில்லை என்றார்கள். அதற்கு பதிலளித்த என்.ராம், “ஆய்வாளர்களின் கட்டுரைகள் ஆய்வு நோக்கத்தில் கனமான தன்மையுடன்தான் இருக்கும். அதை நாம்தான் உள்வாங்கி புரிந்துக்கொண்டு எளிமைப்படுத்தி பிரசுரிக்க வேண்டும். குறிப்பாக, பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

ஒரு சித்தாத்தம் வெற்றி பெற வேண்டும் எனில் அதற்கு அரசாங்க, மக்கள் ஆதரவு உட்பட பல்வேறு தரப்புகளின் ஆதரவு தேவை. அந்த வகையில் கேர ளத்தில் பஞ்சாயத்துகளை வழிநடத் துகிறது ‘கிளா’ (Kerala Institute of Local Administration). சமீபத்தில் கூட அந்த அமைப்பு திருச்சூரில் ‘விளிம்பு நிலை மக்களின் வறுமையும் அதிகாரப் பரவலும்’ என்கிற தலைப் பில் ‘உலக நாடுகளில் விளிம்பு நிலை மக்களுக்காக உள்ளாட்சி அமைப்புகள் எப்படிச் செயல்படு கின்றன?’ என்பதுகுறித்த சர்வ தேச கருத்தரங்கம் ஒன்றை நடத்தி யது. இங்கிலாந்து, கிரீஸ், போர்ச்சுகல், இலங்கை, பங்களாதேஷ், ஸ்வீடன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

சரி, தமிழகத்தில் இதுபோல ஏதும் இருக்கிறதா?

இருக்கிறது. திண்டுக்கல்லில் இருக்கும் காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல்துறை கடந்த 20 ஆண்டுகளாகவே இதுபோன்ற பணிகளை செய்துவருகிறது. காந்திய பொருளாதாரத்தை, காந்திய தத்து வத்தை கற்பிக்க, பரிசோதிக்க, நடை முறைப்படுத்த உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் காந்தி கிராமம் பல்கலைக்கழகம்.

கடந்த 1946-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி காந்தி இந்த வழியாக ரயிலில் பயணித்தார். அப்போது சின்னாளப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் ரயிலை நிறுத்தி காந்தியை சந்தித்து உரையாடினார். அந்த இடத்தில்தான் 1956-ம் ஆண்டு காந்தியவாதிகளான டாக்டர் டி.எஸ்.சவுந்திரம் மற்றும் டாக்டர் ஜி.ராமச் சந்திரன் ஆகியோர் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினர். 1976-ம் ஆண்டு முதல் இந்தப் பல் கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.

காந்தி கிராமம் கல்வி நிறு வனத்தின் அடிப்படை நோக்கம் ஊரக வளர்ச்சி. ஆனால், அரசியல் கற்றுக்கொள்ளாமல் ஊரக வளர்ச்சி சாத்தியமில்லை. அதற்காக தொடங் கப்பட்டது அரசியல் அறிவியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை. இந்தத் துறையை 20 ஆண்டு களாக வழிநடத்தி வருகிறார் பேராசிரியர் பழனிதுரை. உலகம் முழுவதும் சென்று உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார் இவர். அவரிடம் பேசினோம்.

“இந்தத் துறையில் என்னுடன் பேராசிரியர்கள் ரகுபதி, நக்கீரன், செலின் ராணி, உதவிப் பேராசிரியர் ஹாக்கிப் ஆகியோர் இணைந்து செயல்பட்டார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுடன் பணியாற்றிய திரு நாவுக்கரசு களப் பணியில் பெரும் பங்காற்றினார்.

தற்போது இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் இருக்கும் முனைவர் உமா, பெண் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பயிற்சிகளை அளித்தார். பத்திரிகையாளரும் ‘தி இந்து’ குழுமத் தலைவருமான என்.ராம், பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் ஊடகங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொடுத்தார்கள்.

இந்தத் துறையை உருவாக்கிய போது முதலில் இளங்கலை வளர்ச்சி நிர்வாகம் என்கிற பட்டப் படிப்பை அளித்தோம். கிராம வளர்ச்சிக்காக விஞ்ஞானபூர்வமாக களத்தில் வேலை செய்வதற்கான அடிப்படை பயிற்சி அது. கிராமத்தில் இருக்கும் முன்னேற்ற நிறுவனங்களுடன் இணைந்து தலைமைத்துவத்தை உரு வாக்குவது இதன் நோக்கம்.

தொடர்ந்து அதிலேயே முதுகலை பட்டப் படிப்பை தொடங்கினோம். முதுகலை என்றால் இரண்டு ஆண்டு கள்தான் இருக்கும். ஆனால், நாங்கள் தொடங்கிய முதுகலைப் படிப்பு ஐந்தாண்டுகள் கொண்டது. எதற்காக ஐந்தாண்டுகள் என்று அனைவரும் ஆச்சர்யமாகக் பார்த்தார்கள்.

இதர படிப்புகளைப்போல இது வெறும் ஏட்டுக் கல்வி அல்ல; முழுமையான களக் கல்வி இது! நகரமயமாதல் காரணமாக கிராமங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. நீர்நிலைகள் உருக்குலைந்துப்போயின. விவசாயம் பாதியாகக் குறைந்துபோனது. தச்சு, நெசவு, மண்பாண்டம் செய்தல், கால் நடை போன்ற பாரம்பரியத் தொழில்கள் அழிந்துபோயின. கிராம மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோயின. இதை எல்லாம் சரிசெய்வதுதான் மேற் கண்ட ஐந்தாண்டு படிப்பின் நோக்கம். மாணவர்களைக் கொண்டுச்சென்று கிராமங்களில் இறக்கிவிட்டோம். அவர்கள் விவசாயிகளுடன் வாழ்ந் தார்கள். நெசவாளர்களுடன் வாழ்ந் தார்கள். கடலோடிகளுடன் வாழ்ந்தார் கள். குயவர்களுடன் வாழ்ந்தார்கள். வெட்டியான் சமூகத்துடன் வாழ்ந்தார் கள். வெவ்வேறு சமூகங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, சவால் களை அனுபவரீதியாக புரிந்து கொண்டார்கள். எங்கள் மாணவர்கள் புத்தகத்தில் இருந்து அதிகம் கற்க வில்லை. அவர்கள் சமானிய மக்களிடம் இருந்து கற்றார்கள். இது தான் மக்களுக்காக மக்களால் அளிக்கப்படும் கல்வி.

இதுதவிர, கிராம நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சி அளிக்கப் பட்டது. நடைமுறை சிக்கல்களுக் கான தீர்வுகளைக் கண்டு அரசுக்கு ஆலோசனை சொல்வது இதன் நோக்கம். உதாரணத்துக்கு, விவ சாயிகள் சந்திக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு சொல்லலாம். நீர் மேலாண்மை குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்கலாம். தவிர, கிராமங்களின் வளர்ச்சிக்கு புதிய கொள்கைகளை, திட்டங்களை உருவாக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மாண வர்கள் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அவரை மக்களுக்கான தலைவராக தயார் செய்ய வேண்டும். ஒரு பஞ்சாயத்து தலைவருக்குரிய அதிகாரங்கள், கடமைகள், உரிமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இப்படியாக இதுவரை இங்கே 8 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

இது தவிர, பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் இங்கே பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பயிற்சியைத் தொடங்கும்போது நாங்கள் பஞ்சாயத் துத் தலைவர்களிடம் சொல்வது இதுதான். “நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமா? இல்லை, மக்களிடம் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமா? நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்” என்று சொல்வோம். பின்பு பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுப்போம்.

பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம், விதிமுறைகள் என்னச் சொல்கின்றன? மத்திய அரசும், மாநில அரசும் பஞ்சாயத்துக்களுக்கு அளிக்கும் நிதி எவ்வளவு? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? அவற்றை தங்களது கிராமப் பஞ்சாயத்துக்கு பெறுவது எப்படி? அதிகாரிகள் ஆதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி? ஒப்பந்ததாரர் கமிஷன் கேட்டால் எப்படி மறுக்க வேண்டும்? ஒப்பந்தப் பணிகளை மக்கள் மூலமாக எப்படி மேற்கொள்ள வேண்டும்? ஒரு அதிகாரியை எப்படி அணுக வேண்டும். அதிகாரி தன்னை சந்திக்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அவர்கள் சுயமாக செயல்படுவது எப்படி என ஒன்றுவிடாமல் பயிற்சி அளிக்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத் துத் தலைவர்களை சங்கம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினோம். அப்படி உருவானதுதான் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு” என்கிறார்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட முதல் தலைமுறை பஞ்சாயத்துத் தலைவர்கள் பட்டை தீட்டப்பட்டதும் இங்கேதான். இந்தத் தொடரில் இடம்பெற்ற முன்னுதாரணத் தலை வர்களான ஓடந்துறை சண்முகம், மைக்கேல்பட்டினம் ஜேசுமேரி, அரியனேந்தல் நந்தகோபாலன், ஜி.கல்லுப்பட்டி வளையாபதி உள் ளிட்டோர் இங்கு தயாரானவர்களே. பெண்களுக்கு, தலித்களுக்கு பத்தாண்டுகள் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு பெற காரணமாக இருந்த திருவாரூர் மாவட்டம், ஆனைக்குப்பம் பொன்னி கைலாசம், இந்துக்களின் புனிதத் தலமான தேவிப்பட்டணம் நவபாஷணம் கடல் கோயிலுக்கு நடைமேடை அமைத்துக்கொடுத்த இஸ்லாமிய பெண் தலைவர் ஜம்ரூத் பீவி, தலித் மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட செம்மிப்பாளையம் வி.பொன்னுசாமி, ஏழைகளுக்கு தினசரி உணவளித்து பசிப் பிணியைப் போக்கிய நூத்துலாபுரம் கலா, காவிரியில் சாயக் கழிவு நீர் கலந்ததற்கு எதிராக போராடிய கரூர் மாவட்டம் - அப்பிப்பாளையம் ஈஸ்வரி, மணல் கொள்ளைக்கு எதிராக போராடி வென்ற புதுக்கோட்டை மாவட்டம்- இடையாத்திமங்கலம் ஆறுமுகம், திருச்சி மாவட்டம்- திருவாசி சேரன், சாண எரிவாயு மூலம் வீடுகளுக்கு அடுப்புகள் அமைத்துக்கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம்- பரம்பூர் வாகித் ராஜா... இவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறையுடன் தொடர்புடையவர்களே!

- பயணம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x