Last Updated : 25 Oct, 2022 07:40 PM

3  

Published : 25 Oct 2022 07:40 PM
Last Updated : 25 Oct 2022 07:40 PM

கோவை கார் வெடிப்பு சம்பவம் | போலீஸின் வாகன சோதனையால் மிகப் பெரிய நாசவேலை தடுப்பு?

கோவை: கோவையில் கார் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், கோட்டைமேடு பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையால் மிகப் பெரிய நாசவேலை தடுக்கப்பட்டது போலீஸ் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நேற்று (அக்.24) கொண்டாடப்பட்டது. மாநகரில் டவுன்ஹால், பெரியகடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்டவை பெரிய பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அதிகம் உள்ள வர்த்தக பகுதியாகும். இங்கு சாதாரண நாட்களிலேயே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். எனவே, மேற்கண்ட வர்த்தகப் பகுதிகளில் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக போலீஸாரின் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில், பெரியகடை வீதி சந்திப்பு அருகே உக்கடம் போலீஸாரின் புறக்காவல் நிலையம் எனப்படும் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு எஸ்.ஐ தலைமையில் போலீஸார் கார் வெடித்த நடந்த சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மேற்கண்ட 23-ம் தேதி அதிகாலையில் ஜமேஷா முபின் தான் திட்டமிட்டபடி, காரில் சிலிண்டர் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கோட்டைமேட்டில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில் வழியாக பெரியகடை வீதி நோக்கி வந்துள்ளார். அந்தக் காரில் சிலிண்டருடன் வேறு சில வெடி மருந்துகளும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. காரை மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிக்கலாம் என்ற திட்டத்துடன் ஜமேஷா முபின் வந்திருக்கலாம். ஆனால், அந்த சாலையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸார் சோதனையில் இருப்பதை பார்த்து ஜமேஷா முபின் அதிர்ச்சியடைந்திருக்கலாம்.போலீஸார் தன்னை தடுத்துவிடுவர் என்பதை உணர்ந்த ஜமேஷா, கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்க முற்படும்போது சிலிண்டர் வெடித்து உயிரிழந்திருக்கலாம் அல்லது போலீஸார் தன்னை பிடித்து விடுவார் என்று எண்ணி திட்டமிட்டு சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வெடி மருந்துகள் இருந்ததால், இந்த தீயில் கார் இரண்டு துண்டாக உடைந்து உருக்குலைந்து கிடந்தது.

காரை மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் நிறுத்தி வெடிக்கச் செய்ய ஜமேஷா முபின் திட்டமிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் காரை நிறுத்தியிருந்தால், வெடிப்பு சம்பவத்தால் உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கும். ஆனால், போலீஸார் சோதனைப் பணியில் இருந்ததால், அந்த வீதியை தாண்டி ஜமேஷாவால் காரை எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தெரிய வருகிறது. போலீஸாரின் சோதனையால் நாச வேலை தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

55 கிலோ வெடி மருந்து பறிமுதல்: இதற்கிடையே, ஜமேஷா முபின் இதற்கு முன்னரே ஒருமுறை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அப்போது போலீஸாரின் கெடுபிடியால் அது முடியாமல் போனதாக கூறப்படுகிறது. தற்போது 2 -வது முறையாக ஜமேஷா முபின் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்து, அதில் அவரே உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜமேஷா வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவை இருந்துள்ளது. அது எவ்வளவு என்பதை போலீஸார் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், கிட்டத்தட்ட 55 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக உளவுத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. ஜமேஷா முபின் வெடிமருந்துகளை எங்கு வாங்கினார், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தொடர்புடைய செய்தி > ‘ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் தொடர்பு’ - கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் பின்னணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x