Published : 25 Oct 2022 06:18 PM
Last Updated : 25 Oct 2022 06:18 PM
கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 23-ம் தேதி அதிகாலை, கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி வந்த மாருதி 800 கார், சங்கமேஸ்வரர் கோயில் அருகே வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) எனத் தெரியவந்தது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டாலும், தீயின் தாக்கத்தை பார்க்கும்போது, அதில் வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்தும் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இன்ஜினியரிங் பட்டதாரியான ஜமேஷா முபினுக்கு திருமணமாகிவிட்டது. மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தொடக்கத்தில் பழைய புத்தகக்கடையில் வேலை செய்து வந்த இவர், சமீபத்திய ஆண்டுகளாக சாலையோரத்தில் பழைய துணிகளை விற்பனை செய்து வந்துள்ளார். முன்பு உக்கடம் ஜி.எம்.நகரில் வசித்து வந்த ஜமேஷா முபின், கடந்த 40 நாட்களுக்கு முன்பு கோட்டைமேடு பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவரது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தான் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் முபின் உயிரிழந்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்: கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் ஜக்ரன் ஹாசீம் என்ற தீவிரவாதிக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களைச் சேர்ந்த நிறைய பேரிடம் ஜக்ரன் ஹாசீம் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
அதில் குறிப்பாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி போனில் பேசியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரான இவர் கைதுசெய்யப்பட்டு தற்போது கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது அசாருதீனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த பட்டியலை தயாரித்து போலீஸார் விசாரித்தனர். அதில் தற்போது கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததும், வாட்ஸ் அப் மூலம் தொடர்ச்சியாக பேசி வந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். அதனடிப்படையில் 2019-ம் ஆண்டு ஜமேஷா முபின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமேஷா முபினும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு எண்ணத்துடன் இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT