Last Updated : 25 Oct, 2022 02:23 PM

 

Published : 25 Oct 2022 02:23 PM
Last Updated : 25 Oct 2022 02:23 PM

தஞ்சை | ராஜராஜ சோழன் 1037வது சதய விழா: விமரிசையாக நடந்தது பந்தக்கால் முகூர்த்தம்

 பட விளக்கம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. படம் ஆர். வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் இன்று காலை (25ம் தேதி) நடப்பட்டது.

தஞ்சாவூர், பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில்,இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோயிலில் இன்று (25ம் தேதி), காலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2 ஆம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

நவ.3 ஆம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர். இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x