Published : 24 Oct 2022 01:57 PM
Last Updated : 24 Oct 2022 01:57 PM

கோவை சம்பவத்தின் பின்னணியில் இருப்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

கோவையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உருக்குலைந்த கார்

சென்னை: "பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கோவை உக்கடம் பகுதியில் நேற்று (அக்.23) அதிகாலை 4.30 மணியளவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது. காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

இது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும். இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருந்திட வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன் பின்னணியில் ஏதேனும் தீவிரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவுகளாய்ப் பிணைந்து இணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது. பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.

தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் வதந்திகளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்றிட வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x