Published : 24 Oct 2022 07:54 AM
Last Updated : 24 Oct 2022 07:54 AM
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக இன்று இரவு முதல் 26-ம் தேதி வரை 6,852 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 17,440 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, கடந்த 21-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. 21,22 ஆகிய நாட்களில் பேருந்துகளில் அதிகளவு மக்கள் பயணித்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வரை 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருந்தனர். நேற்றும் சென்னையில் இருந்து 1,195, பிற ஊர்களில் இருந்து பல்வேறு முக்கிய இடங்களுக்கு 1,985 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முந்தைய இரு நாட்களிலேயே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் நேற்று பேருந்துகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதாக ஏற்படவில்லை.
சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக இன்று இரவு முதல் 26-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 6,852 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தீபாவளி முடிந்து அன்றே பெரும்பாலானோர் ஊர் திரும்ப வாய்ப்பில்லை என்பதால் 24-ம் தேதி (இன்று) இரவு குறைவான சிறப்புப் பேருந்துகளே இயக்கப்படும்.ஆனாலும், தேவைக்கேற்பபேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.25-ம் தேதிவழக்கமான பேருந்துகளுடன் 3,758 சிறப்புப் பேருந்துகள் இயக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி ஊர் திரும்பும்வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்துத்துறை செய்துள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT