Last Updated : 24 Oct, 2022 08:39 AM

1  

Published : 24 Oct 2022 08:39 AM
Last Updated : 24 Oct 2022 08:39 AM

காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவம்: கோவையில் காவல் துறையினர் கண்காணிப்பு தீவிரம்

கோவை

காரில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே நேற்று அதிகாலை மாருதி காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

நான்கு புறமும் தலா 100 மீட்டர் தூரத்துக்கு மக்கள் நுழைய தடை விதித்து இரும்பு தடுப்புகளை அமைத்தனர். குறிப்பாக, டவுன்ஹாலில் இருந்து கோட்டைசங்கமேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் ஈஸ்வரன் கோயில் வீதி பாதையை அடைத்தனர். அவ் வழியாக செல்லும் மக்களிடம் பெயர், விவரங்களை போலீஸார் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

அந்தச் சாலையில் உள்ள ஜவுளிக்கடைகள், புத்தகக்கடைகளை திறக்க போலீஸார் தடை விதித்தனர். இதனால் தீபாவளிப் பண்டிகை வியாபாரத்தை நடத்த முடியாமல், ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்கள் வருத்தத்துடன் டவுன்ஹால் பகுதியில் நின்றிருந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் முகாமிட்டு டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகரகாவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர்.

கார் வெடித்து சிதறியபோது, அதன் உதிரி பாகங்கள் நாலா புறம் சிதறின. அதன்படி, உதிரிபாகங்களின் ஒரு பகுதி சங்க மேஸ்வரர் கோயில் சுவரின் மீது மோதி கீழே விழுந்துள்ளது. இதில் கோயின் முன்பகுதியில் இருந்த பெயர் பலகை உள்ளிட்டவை சேதமடைந்தன.

பருவமழையின் காரணமாக மாநகரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் மழை பெய்து, தடயங்கள் எதுவும் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும், விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடக்கவும் ஏதுவாக அங்கு சாமியானா பந்தல் அமைத்தனர். விபத்து நடந்த பகுதியை முழுமையாக மறைக்கும் அளவுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் இந்து முன்னணியினரை போலீஸார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், மத ரீதியிலான பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கோவை போலீஸார் மட்டுமின்றி, நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், முக்கிய கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டனர்.மாநகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் வாகன தணிக்கை நடத்தினர்.

உடுமலையில் பலத்த பாதுகாப்பு: உடுமலையில் உள்ள மாரியம்மன் கோயில், பூர்வீக பள்ளிவாசல், பாஜக அலுவலகம் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் முன்பாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல தாராபுரத்தில் பெரியகடை, சோளக்கடை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், மதரீதியான அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் வீடுகள் முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மறு உத்தரவு வரும்வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x