Published : 24 Oct 2022 06:15 AM
Last Updated : 24 Oct 2022 06:15 AM
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி கடைசி நாளான நேற்று துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை நேற்று களை கட்டியது.ஞாயிற்றுக்கிழமையான நேற்றுசென்னையில் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்குப் படையெடுத்தனர்.
தியாகராய நகரில் நேற்று காலை முதலே பொருட்கள் வாங்குவதற்கும், துணிகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால் உஸ்மான் சாலை, பாண்டிபஜார், பனகல்பூங்கா, பர்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். அதேபோல், நகைகளையும் மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதால், நகைக்கடைகளில் கூட்டம்அலைமோதியது. பெரிய கடைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சிறிய கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது.
வடக்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். தற்போது முதல்முறையாக தியாகராய நகரில் 6 ஆர்எஃப்சிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தால் போலீஸாருக்கு சுலபமாக அடையாளப்படுத்திவிடும். உயர் கோபுரங்கள் அமைத்து, அதிலிருந்தும் கூட்டத்தை போலீஸார் கண்காணித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றத்தையும் போலீஸார் செய்திருந்தனர். ஒலிபெருக்கி மூலம் மக்களை கவனமாக இருக்கக்கூறி தொடர்ந்து எச்சரித்தனர்.
அதேபோல், புரசைவாக்கத்தில் அதிகாலை முதலே துணிக் கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் காலையிலேயே வந்து துணிகளை வாங்கினர். வில்லிவாக்கத்தில் இருந்து குடும்பத்தினருடன் துணிவாங்க வந்த ராஜேஷ் கூறும்போது, "இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுப்புது டிசைன்களில் துணிகள் வந்துள்ளன. மனதுக்கு பிடித்தமான துணிகளை வாங்க முடிந்தது" என்றார். கொளத்தூரில் இருந்து ஜவுளிவாங்க வந்த இல்லத்தரசி ஷோபனா, "இந்த ஆண்டு புடவைகள் பல்வேறு டிசைன்களில் வந்துள்ளன. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அணிந்தது போன்றடிசைனில் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது" என்றார்.
புரசைவாக்கத்தில் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்துவரும் ஜமாலுதீன் கூறும்போது, "கரோனாகாரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு வியாபாரம் பாதித்தது. இந்த ஆண்டு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாததால் மக்கள் ஆர்வத்துடன் வந்து துணிகளை வாங்குகின்றனர். எனவே, இந்த ஆண்டுவியாபாரம் நன்றாக நடைபெறுகிறது" என்றார். இனிப்புக் கடை உரிமையாளர் குணசேகர், "இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பலகாரங்கள் ஆர்டர் வரத் தொடங்கின. இதனால், நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான அளவு இனிப்புகளை தயாரிக்கத் தொடங்கினோம். கடைசி நேரவிற்பனை நாங்கள் எதிர்பார்த்ததை விட அமோகமாக நடைபெற்று வருகிறது" என்றார்.
வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையிலும் வியாபாரம் களைகட்டியது. விழாக் கூட்டம் போலமக்கள் குடும்பத்தினருடன் வந்து தங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிச் சென்றனர். சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில் பட்டாசுகள் விற்பனைபரபரப்பாக நடைபெற்றது. தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம்காட்டினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகளில் 1000 வகைகளுக்கு மேலானபட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான பட்டாசு பெட்டிகளை மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு குழந்தைகளுக்கு மட்டும் புதிதாக ஆயிரம் வகையான பட்டாசுகள் வந்துள்ளன. 100 சதவீதம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment