Published : 24 Oct 2022 06:52 AM
Last Updated : 24 Oct 2022 06:52 AM
சென்னை: தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ்விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், 2021-ம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022-ம்ஆண்டுக்கு தனி நபர், நிறுவனத்திடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018,2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பங்கள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு வரும்டிச.31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 – 28190412, 28190413ஆகிய தொலைபேசி எண்கள், tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT