Published : 24 Oct 2022 04:25 AM
Last Updated : 24 Oct 2022 04:25 AM
சிதம்பரத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக, போடப்பட்ட மாற்று சாலையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் புறநகர் பகுதியில் சர்ச்அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதன் அருகில் தில்லையம்மன் ஓடையை ஆக்கிரமித்து மாற்று சாலை அமைக்கப்பட்டது. தற்போது மாற்று சாலை வழியாக அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால், தில்லையம்மன் ஓடை, சிதம்பரம் நகரின் முக்கியமான பிரதானவடிகாலாகும். சிதம்பரம் நகரில் இருந்து மழைநீர் இதன் வழியாக தான்வெளியேறும். தற்போது மாற்றுசாலை யால் தில்லையம்மன் ஓடை சுருங்கி சின்ன சாக்கடை போல உள்ளது. இதன் வழியாக மழை தண்ணீர் வேகமாக வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் சிதம்பரம் வடக்கு பகுதி மற்றும் வண்டிகேட், பள்ளிப்படை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் நீர்வளத்துறையினர், சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளிதரனி டம் கேட்ட போது, "மழை பெய்தால் மாற்று சாலையை அகற்றிவிடுவோம்" என்றார். புதிய பாலப்பணிகள் முடிவடையாத நிலையில், மாற்று சாலையை அகற்றினால் பேருந்துகள், லாரிகள் புறவழிச் சாலை வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள். தற்போது புறவழிச்சாலையில் விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலைப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT