Last Updated : 23 Oct, 2022 06:35 PM

 

Published : 23 Oct 2022 06:35 PM
Last Updated : 23 Oct 2022 06:35 PM

மதுரை | விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை; நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சி

புத்தாடைகள் வாங்க மதுரை கடைவீதிகளில் குவிந்த மக்கள்.

மதுரை: மதுரையில் இறுதிக்கட்ட தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியுள்ளது. மழை இல்லாததால் துணிமணி தொடங்கி பிளாஸ்டிக் பொருட்கள், பேன்ஸி பொருட்கள் என அனைத்தையும் விற்பனை செய்யும் நடைபாதைக்
கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

நாளை (அக்.,24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. காரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளை விட, இவ்வாண்டு, மதுரையில் தீபாவளி பஜார் சில நாட்களாகவே களைகட்டியிருந்தது. கீழவாசல், விளக்குத்தூண், மாசி வீதிகளிலுள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து புத்தாடைகள், பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர். தீபாவளிக்கு கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மற்ற தினங்களை விட மக்களின் கூட்டம் அலைமோதியது. காமராசர் சாலை, விளக்குத் தூண், கீழவாசல் , மாசி, மாரட் வீதிகளில் மக்கள் வெள்ளம் திரண்டது.

பெரும்பாலும் ஒவ்வொரு தீபாவளியையொட்டிலும் பிளாட்பாரக் கடைகளில் புத்தாடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கென குறிப்பிட்ட மக்கள் அதிகமாக கூடுவது வழக்கம். இதன்படி, நேற்று நள்ளிரவைத் தாண்டியும் பஜார் நீடித்தது. புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்தனர். குறிப்பாக பிளாட்பாரக் கடைகளில் குறைந்த தள்ளுபடி விலையிலான ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.

குடை, பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர், சிறுமியருக்கான துணிகள் மற்றும் பிற பொருட்கள் கூவி, கூவி விற்கப்பட்டன. மூட்டை மூட்டையாக வாங்கி, தலையில் தூக்கிச் சென்றனர். நேற்று காலை முதலே கீழவாசல் சந்திப்பு, சிம்மக்கல், தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலைய பகுதியில் இருந்து மக்கள் படையெடுப்பால் விளக்குத்தூண் பகுதிக்கு காவல்துறையினர் வாகனம் தவிர, பிற வாகனங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட விற்பனைக்கு வர்த்தக நிறுவனங்கள், பிளாட்பாரக்கடைகள் தயாரான நிலையில், மக்கள் அதிகரிப்பால் குற்றச்சம்பவங்களை தடுக்க, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் அவ்வப்போது, பல்வேறு அறிவுரைகளைக் கூறினார்.

விளக்குத்தூண், மாசிவீதிகள் உட்பட 16க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கோபுரங்களில் இருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் ஆங்காங்கே மைக் மூலம் எச்சரித்தனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும், கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாகவும் கூட்டம் நிறைந்த பகுதியைக் கண்காணித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, சீரமைக்க மைக் மூலம் அறிவுறுத்தினர்.

விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ''பிற நாட்களைவிட, நேற்று பகல் முதலே கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம். குற்றச் செயல்களைத் தடுக்க, கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்தோம். பிளாட்பாரக் கடைகளில் மக்கள் திரள்வர் என்பதால் இரவு 10 மணிக்கு மேல், அது போன்ற இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். மொத்தத்தில் பெரியளவில் வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க. போதிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x