Published : 23 Oct 2022 03:15 PM
Last Updated : 23 Oct 2022 03:15 PM
சென்னை: "ஆந்திராவில் தமிழக மாணவர்களும், மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்த குண்டர்களை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய ஆந்திர அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அங்கு வசிகக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக் கட்டணத்தைப் பணமாக செலுத்தக் கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத் தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவர்களை உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது உள்ளக்கொதிப்பைத் தருகிறது.
கேரளாவில் வழிபாட்டுக்குச் சென்ற சாந்தவேலு எனும் தமிழர், அந்நிலத்தில் வெந்நீர் ஊற்றிக் கொலை செய்யப்பட்டதும், காவிரிச் சிக்கல் பேசுபொருளாகும் போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், ஆந்திரக்காட்டுக்குள் 20 தமிழர்களை அம்மாநிலக் காவல்துறை சுட்டுக்கொலை செய்ததுமான இனவெறிச் செயல்களின் நீட்சியாகவே, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுந்துயரம் அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தமிழர்கள் நாங்கள் பெருத்த ஜனநாயகவாதிகள்; பெருந்தன்மையாளர்கள். ஆகவேதான், பெரும் அநீதிகள் இழைக்கப்பட்ட போதிலும் நாங்கள் அறவழியில் நீதிகேட்டு நிற்கிறோம். எங்களது ஜனநாயக உணர்வையும், பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, இனியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிடலாமென்று கணக்கிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கிறேன். எந்தவிதத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த கொடுங்கோலர்களின் கோரத்தாக்குதலுக்கு எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, தாக்குதல் தொடுத்த குண்டர்களை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், ஆந்திராவிலுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT