Published : 23 Oct 2022 02:32 PM
Last Updated : 23 Oct 2022 02:32 PM
சென்னை: ஒடிசாவைத் தொடர்ந்து ராஜஸ்தானில் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசுப்பணிகளில் பணியாற்றும் தற்காலி ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவது எப்போது என்று பாமக தலைவைர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''ராஜஸ்தான் அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 1,10,279 ஒப்பந்த பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படவுள்ளனர். அதற்கான விதிகளுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க சமூகநீதி நடவடிக்கை ஆகும்.
இனிவரும் காலங்களில் தற்காலிக ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு; நிரந்தர பணியாளர்களின் ஊதியத்தை கணக்கிட்டு, ஊதியம் நிர்ணயிக்கப்படும்; 5 ஆண்டுகளில் பணி நிலைப்பும், பழைய ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
ஒடிசாவில் 57,000 தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பணி நிலைப்பு குறித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கான சமூக நீதியை எதிர்பார்க்கின்றனர்.
தற்காலிக பணியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT