Published : 03 Nov 2016 09:05 AM
Last Updated : 03 Nov 2016 09:05 AM
சென்னையில் இருந்து திருச் சிராப்பள்ளிக்கும், சேலத்துக்கும் 2 அடுக்கு ஏசி விரைவு ரயில் இயக்க முடியுமா? என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் முதல்கட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்தவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, வியா பாரம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல சாலை போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். ரயில் பயணத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லை, கட்டணம் குறைவு, சொகுசாக செல்வதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், ரயில் போக்குவரத்து தேவை முன்பை காட்டிலும் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது 4 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. எனவே, புதிய ரயில் சேவை எங்கள் பகுதிக்கு வந்து விடாதா? என மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
2 அடுக்கு ரயிலுக்கு வரவேற்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு 2 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட விரைவு ரயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு இந்த ரயில், பிற்பகல் 1.10 மணிக்கு பெங்களூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடைகிறது. இரு நகரங்களுக்கும் இடையே உள்ள சுமார் 360 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரத்தில் கடக்கிறது. இதில் மொத்தம் 1,200 பேர் பயணம் செய்யலாம். இந்த 2 அடுக்கு ரயிலுக்குப் பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகளவில் மக்கள் பயனடைய முடிகிறது.
இதற்கிடையே, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழகம் சார்பில் கலந்து கொண்ட ரயில் பயணிகள் நலச் சங்கங்கள் சென்னை திருச்சி, சென்னை சேலம் இடையே 2 அடுக்கு ரயில் சேவை தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பண்டிகை, வார விடுமுறை நாட்களை போல், மற்ற நாட்களில் மேற்கண்ட 2 வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்வார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில்வே துறையில் 6 மாதங் களுக்கு ஒருமுறை பயணிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கை கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்துக்கும் 2 அடுக்கு விரைவு ரயில் தொடங்க வேண்டு மென வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள், சென்னை கோட்ட அதிகாரிகளுடன் முதல் கட்ட ஆலோசனை நடத்தப் படுகிறது.
இதையடுத்து, மேற்கண்ட 2 வழித்தடங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு அறிக் கையை பார்த்த பின்னர், ரயில்வே வாரியம் முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT