Published : 22 Oct 2022 10:33 PM
Last Updated : 22 Oct 2022 10:33 PM
கோவை: கோவை மதுக்கரை அருகே, உருண்டு வீட்டின் மீது சாய்ந்து நிற்கும் பாறையை, பெரிய விபத்துகள் ஏற்படும் முன்னர் உடைத்து அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மலையை சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்குள்ள மலையில் இருந்து இன்று (அக்.22) மதியம் 25 அடி உயரம், 100 அடி சுற்றளவு கொண்ட பெரிய பாறை வலுவிழந்து சில அடி கீழே உருண்டது. அந்த பாறை சில அடி தூர இடைவெளியில் உள்ள மதுக்கரை மலைச்சாமி கோயில் வீதியைச் சேர்ந்த வசந்தகுமாரி(45) என்பவரது வீட்டு சுவற்றின் ஒரு பகுதியில் மோதி சாய்ந்து நின்றது. பாறை மோதியதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. பாறை வலுவிழந்து உள்ளதால் எந்த நேரத்திலும் அங்கிருந்து கீழே உருண்டு விழுந்தும் நிலையில் உள்ளது.
அவ்வாறு உருண்டு விழுந்தால் கீழே உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறை, தீயணைப்புத்துறையினர் இணைந்து பாறையை உடைத்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினர் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT