Published : 22 Oct 2022 03:44 PM
Last Updated : 22 Oct 2022 03:44 PM
சென்னை: “அனைவரும் பட்டாசு வெடிக்க வேண்டும். ஒரு நாளில் எந்த மாசும் நேராது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஸ்கர் மேளா" திட்டத்தை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது, "இன்று மிக முக்கிய நாள். டிசம்பர் 2023-க்குள் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 75 இடங்களில் இன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்களுக்கு மிக பெரிய அளவில் மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதற்கு பாரத பிரதமருக்கு நன்றி.
இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் சரியாக வேலைக்கு பதிவு செய்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்.
சென்ற ஆண்டு 10-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்ற 52,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது? இந்தியாவில் அதிக பொறியாளர்கள் உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் பாடம் உள்ளதா? பயிற்று மொழி தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்துள்ளதா? திமுக அனைத்தையும் குருட்டுத் தனமாக எதிர்கிறது. தமிழ் மொழியை வியாபாரம் செய்து திமுக ஆட்சி செய்கிறது.
திமுக இப்படியே சென்றால் தமிழுக்கு சமாதி கட்டி விடுவார்கள்.தமிழகத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்று மொழி தமிழ் என்று தமிழக அரசு அறிவித்தால், பாஜக அதை நிச்சயம் வரவேற்கும். இது மக்கள் பிரச்சினை இல்லை. இந்தி திணிப்பு எங்கும் இல்லை என்று மக்களுக்கு தெரியும்.
பாஜக சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவரும் பட்டாசு வெடியுங்கள். சிவகாசி பட்டாசு விற்பனையாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஒரு நாளில் எந்த மாசும் நேராது. தீபாவளிக்கு எல்லோரும் நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு இன்பம் பெருகும் அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள் சிவகாசி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக எல்லோரும் நிறைய பட்டாசுகள் வெடிக்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT