Published : 22 Oct 2022 08:32 AM
Last Updated : 22 Oct 2022 08:32 AM
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டால், சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைவது சிக்கலாகியுள்ளது. இதற்கிடையே, அதிமுகவை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பழனிசாமி வேகம் காட்டி வருவதால், ஓபிஎஸ் தனித்துவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் மறைந்தார். அவரதுமரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், சசிகலா சிறை செல்ல, முதல்வரானார் பழனிசாமி. அதன்பின், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை தவிர்த்துவிட்டு பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் கோரிக்கைப்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையமும் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் விசாரணை வரம்பில் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட யாரும் தப்பவில்லை.
இதற்கிடையே, அதிக பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்களுடன் அதிமுகவின் பொதுச்செயலாளராகும் முயற்சியில் பழனிசாமி இறங்கியுள்ளார். இதை எதிர்த்து எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஓபிஎஸ் நாடியுள்ளார். இதுதவிர, ஜெயலலிதா மறைந்த நிலையில், யாரை குற்றம்சாட்டினாரோ, அதேசசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில்தான், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் சிவகுமார், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரைவிசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரையை, சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், முன்பு ஓபிஎஸ் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உள்ளதால், சசிகலா மீதான அதிமுகவினரின் அதிருப்தி அதிகரித்துள்ளது. சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் அதிமுகவைக் கைப்பற்ற ஓபிஎஸ் எடுத்துவரும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் இனி சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் தற்போதுள்ள அதிருப்தி, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மீதான விவாதத்தில், ஓபிஎஸ் மவுனமாக இருந்தது உள்ளிட்டவற்றால், திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று பழனிசாமி தரப்பினர் பேசி வருகின்றனர். மேலும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப்பின், ஒற்றைத் தலைமையாக பழனிசாமி தனது முழுமையான ஆதிக்கத்தில் அதிமுகவை கொண்டு வரு வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
சட்டப் பிரச்சினைகளை முடித்து, விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழல்களால், ஓபிஎஸ்தனித்து விடப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், தொடர் நிகழ்வுகளும் காலமுமே அரசியல் மாற்றங்களை முடிவு செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT