Published : 05 Jul 2014 09:26 AM
Last Updated : 05 Jul 2014 09:26 AM

தமிழகத்தில் நிதி மற்றும் தொழில் நகரம்: சிங்கப்பூர் அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

சென்னையில் நிதி நகரம் அமைக்கவும், மாநிலத்தில் இதர இடங்களில் தொழில் பூங்காக் களை உருவாக்கவும், துறைமுக மேம்பாடு, ஆரம்ப சுகாதாரம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு சிங்கப்பூர் அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூர் நாட்டின் வெளி விவகாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், சென்னை தலைமைச் செயல கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்தித்தார். அரை மணி நேரம் வரை நீடித்த இந்தச் சந்திப்பின்போது, சிங்கப்பூர் மற்றும் தமிழகத்துக்கிடையிலான நீண்ட கால, வரலாற்று ரீதியான உறவினை முதல்வர் சுட்டிக்காட்டினார். தமிழகத்துக்கும், சிங்கப்பூருக்குமிடையே கலாச்சார ரீதியாகவும், மொழி ரீதியிலும் நெருக்கமான உறவுகள் ஒருபுறம் இருந்தாலும், இருதரப்புக் குமிடையே பொருளாதார உறவுகள் அதற்குத் தகுந்தாற் போல் வலுப்பெறவில்லை என்பதும் விவாதிக்கப்பட்டது.

தமிழகம் போன்ற மாநிலத்தில் நிதி நகரம், தொழில் நகரங்கள் அமைக்கப்படுவது போன்ற தேவைகளை வைத்துப் பார்த்தால் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தொழில்நுட்ப முன்னேற்றம், பெரிதும் கைகொடுக்கும். உலகில் சில நகரங்களில் இருப்பது போல் சென்னையில் நிதி நகரம் மற்றும் தொழில் நகரங்களை அமைப்பது, மதுரை-தூத்துக்குடி தொழில் வழிச்சாலை போன்ற தொழில் பூங்காக்களை அமைக்க சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தேவை.

இதுபோல், துறைமுகங்கள் முன்னேற்றம், அறிவுசார் போக்குவரத்து வசதிகள், கழிவுநீரை நன்னீராக மாற்றும் ஆலைகள், சுற்றுலா மற்றும் பாரம்பரியம் சார்ந்த இடங்களின் வளர்ச்சிப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் சிங்கப்பூரால் தமிழகத்துக்கு உதவ முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம் காட்டும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறிய அவர், இருதரப்பும் தொடர்ந்து வரும் நீண்ட கால உறவுக்கேற்ற வகையில், தொழில்ரீதியிலான உறவுகள் வலுப்படவேண்டும் என்பதை ஒப்புக் கொண்டார். சிங்கப்பூரின் பொருளாதார பலமும், சிறந்த உற்பத்தி மையமாக தமிழகம் விளங்குவதையும் பொருத்திப் பார்த்தால், இரு தரப்பு உறவுகள் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அசெண்டாஸ் தொழில் நகரம்

இந்த சந்திப்பின்போது சென்னை அருகே உருவாகி வரும் அசெண்டாஸ் தொழில் நகரத்தில் கணிசமான முதலீட்டினை செய்வதற்காக சிங்கப்பூர் அரசு, தமிழக முதல்வருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனப் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் போன்றவற்றால் தமிழகத்தில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று முதல்வரிடம் அமைச்சர் சண்முகம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x