Published : 22 Oct 2022 06:47 AM
Last Updated : 22 Oct 2022 06:47 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ. 143.02 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை கடந்த ஜனவரி 12-ம் தேதி, டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, 2021-2022-ம் கல்வியாண்டுக்கான இள நிலை மருத்துவ படிப்புக்கு நூறு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு, கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2022-2023-ம் ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது.
இதற்கிடையே, திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்ஷன், எம்.பி. ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், கா.கணபதி, துரை சந்திரசேகர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT