Published : 21 Oct 2022 09:15 AM
Last Updated : 21 Oct 2022 09:15 AM
தேசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் சிறுமிக்கு தமிழக அரசு உதவிசெய்ய வேண்டும் என அச்சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். நெசவுத் தொழிலாளி. இவரதுமனைவி அன்புரோஜா. இவர்களது மகள் சர்வாணிகா(7). அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது மூத்த சகோதரி செஸ் விளையாடுவதை ஆர்வமுடன் கவனித்து வந்த சர்வாணிகா, பின்னர் தானும் ஆர்வமுடன் செஸ் விளையாடத் தொடங்கினார். அவரது ஆர்வத்தை அறிந்த பெற்றோர் உரிய பயிற்சியாளரைக் கொண்டு பயிற்சி அளித்தனர். இதையடுத்து அவர், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று வந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அண்மையில் நடைபெற்ற 35-வது தேசிய செஸ் போட்டியில் கலந்து கொண்டு 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் அண்மையில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், போதிய வசதி இல்லாத தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சர்வாணிகாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சர்வாணிகாவின் தாய் அன்புரோஜா கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர், நண்பர்கள் உதவியுடன் தேசிய அளவிலான போட்டியில் எனது மகள் பங்கேற்று சாதனைபடைத்துள்ளார்.
இப்போது சர்வதேச போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்றுள்ள நிலையில், எங்களுக்கு அதற்குரிய வசதி இல்லை. எனவே, தமிழக அரசு எனது மகளுக்கு உதவவேண்டும்’’ என்றார். அகமதாபாத்தில் நடைபெற்ற 35-வதுதேசிய செஸ் போட்டியில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT