Published : 21 Oct 2022 11:16 AM
Last Updated : 21 Oct 2022 11:16 AM

போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அரசாணை; வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும்: தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: " போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவது, வசூலிப்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும்.சில அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிரப்பு தெரிவித்தாலும், அதை புறந்தள்ளி மக்கள் நலன்கருதி உறுதியான வெளிப்படையான தன்மையோடு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2019-ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பரிந்துரையின்படி, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது சிறப்பு. கட்டுப்பாடில்லாமல் பன்மடங்கு பெருகிவரும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆனால், இந்த மாற்றங்களை முறையாக அமல்படுத்துவதில் தமிழக காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். பன்மடங்கு அபராதம் என்பதால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் பதட்டமடைந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவராகள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி காவலர்களை அடிபணிய செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் இந்த அபராதங்களை விதிக்கும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதோடு, அந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

அதே வேளையில், நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சமரச முயற்சி என்ற பெயரில், அந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். லஞ்சம்பெறும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விதிமீறல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவது, வசூலிப்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக ஒரு வழிப்பாதைகளில் எதிர் திசையில் வாகனம் செலுத்துவோரை கண்டித்து அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். சில அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிரப்பு தெரிவித்தாலும், அதை புறந்தள்ளி மக்கள் நலன்கருதி உறுதியான வெளிப்படையான தன்மையோடு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x