Published : 21 Oct 2022 07:50 AM
Last Updated : 21 Oct 2022 07:50 AM
மதுரை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிக்காக முழு நேர ஊழியர்களைத் தேர்வு செய்யவும், அவர்களுக்கு மாத ஊதியம், வாகனம் வழங்கவும் மாவட்ட தலைவர்களுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 25-ல் வெற்றிபெற பாஜக இலக்கு வைத்துள்ளது. இதையடுத்து தொடக்க கட்ட தேர்தல் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப்பணிகளை மக்களிடம் நேரில் விளம்பரப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுத்தவாறு உள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அனைவரும் அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ளனர். அடுத்தகட்டமாக, மக்களவைத் தேர்தல் பணிக்காக பாஜகவில் முழு நேர ஊழியர்களைத் தேர்வு செய்யுமாறு மாவட்டத் தலைவர்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. தலைவர்கள் வருகை பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது மட்டும் கட்சியினர் தலைகாட்டிவிட்டு போய்விடுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் தேர்தல் பணிக்கு திரும்புகின்றனர். இதனால் முழு நேரமும் தேர்தல் பணி மேற்கொள்ள ஆர்வமாக உள்ள கட்சியினரை அடையாளம் காணவும், அவர்களை கொண்டு தொய்வில்லாமல் தேர்தல் பணி மற்றும் கட்சிப் பணி மேற்கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர்கள் தகவல் அனுப்பியுள்ளனர். அதில், முழு நேரமும் இயக்கப்பணி செய்யவும், அமைப்புரீதியான பணி
களை மேற்கொள்ளவும் முழு நேர ஊழியர்களை தேர்வு செய்ய கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
முழு நேர ஊழியர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதச் சம்பளம், வாகனம், எரிபொருள் கொடுக்கப்படும். முழு நேர ஊழியர்களாக பணிபுரிய விருப்பம் உள்ள கட்சியினர் மாவட்ட தலைவர்களை அணுக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், ‘இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படும். முழு நேர கட்சிப்பணி அமைப்புரீதியான பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT