Published : 21 Oct 2022 04:32 AM
Last Updated : 21 Oct 2022 04:32 AM
சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்ஏஎம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எம்ஏஎம் ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஏ.சி.முத்தையா, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த மறைந்த எம்ஏஎம் ராமசாமி செட்டியாரின் தந்தையும், தனது தந்தையும் சகோதரர்கள். எம்ஏஎம்.ராமசாமி, 1996-ம் ஆண்டு எம்ஏஎம்ஆர்.ஐயப்பன் என்பவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தார்.
ஆனால் நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டுள்ளார். ஐயப்பன், சட்ட விரோதமாக வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்து கொண்டு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, எம்ஏஎம்.ராமசாமியை செட்டிநாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.
மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கோரி ஐயப்பன் விண்ணப்பித்தபோது அதற்கு அப்போதே நானும், டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்ட சிலர் ஆட்சேபம் தெரிவித்தோம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஐயப்பனுக்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். எனவே 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.அருண் மற்றும் எம்ஏஎம்ஆர்.ஐயப்பன் தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ஆவணங்கள் அடிப்படையில்
மயிலாப்பூர் வட்டாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ‘‘எம்ஏஎம்.ராமசாமியின் வளர்ப்பு மகனான எம்ஏஎம்ஆர். ஐயப்பன், வாரிசு சான்றிதழ் கோரிஉரிய ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக குடும்ப அட்டை போன்ற ஆவணங்களிலும் அவர் எம்ஏஎம்.ராமசாமி செட்டியாரின் குடும்ப உறுப்பினர் என்பதற்கான ஆதாரம் இருந்தது.
ஐயப்பன் வாரிசு சான்றிதழ் கோருவதற்கு எதிர்ப்பு உள்ளதாஎன பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா ஆகியோர், அவர்களது வழக்கறிஞர் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். அதில், ஐயப்பனை தத்துஎடுத்ததை எம்ஏஎம் ராமசாமி ரத்துசெய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களையும் முறையாக பரிசீலித்த பிறகே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டது.
எம்ஏஎம்ஆர்.ஐயப்பன் தரப்பில், ‘‘தனக்கு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை’’ என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி என்.சதீஷ்குமார், ‘‘இந்த வழக்கில் ஐயப்பன் முறையாக தத்து எடுக்கப்பட்டுள்ளாரா, இல்லையா என்பதை இந்தநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.வாரிசு சான்றிதழ் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்ய முடியும். எனவே தத்து எடுக்கப்பட்டது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தைத்தான் நாட முடியும்.
மனுதாரர், தன்னிடம் உள்ளஉயில் மூலமாக தத்து எடுக்கப்பட்டதே செல்லாது எனும்போது வாரிசுசான்றிதழ் வழங்கப்பட்டது தவறு எனக்கூறி ரிட் வழக்குகளை விசாரிக்கும் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. வாரிசு சான்றிதழ் என்பது எம்ஏஎம்.ராமசாமியின் வளர்ப்பு மகனாக தத்து எடுக்கப்பட்டுள்ள ஐயப்பனுக்கும், எம்ஏஎம்.ராமசாமிக்கும் உள்ள உறவு முறைக்காக வழங்கப்பட்டுள்ளது. அதை இருதரப்புமே தங்களுக்கான உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனவே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT