Published : 21 Oct 2022 04:42 AM
Last Updated : 21 Oct 2022 04:42 AM

மீன்வளம், கால்நடை துறையில் ரூ.31.67 கோடியில் கட்டிடங்கள் திறப்பு - சட்டத் துறைக்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம்

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் கட்டப்படவுள்ள குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்துக்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். உடன் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர்.

சென்னை: சட்டத் துறை சார்பில் ரூ.32.93 கோடியில் கட்டப்பட உள்ள குற்ற வழக்குத் தொடர்வுத் துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்துக்கான ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்ககம், மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை திறம்படநடத்துதல் மற்றும் அரசு குற்றவியல் வழக்கு நடத்துநர்களின் பணித்திறனை கண்காணித்தல் போன்றவற்றின் மீது முழுக்கட்டுப்பாடு செலுத்தும் இயக்ககம் ஆகும். சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிக்கும் இயக்குநரகம் ஆகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு இயக்குநரகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டும்வகையில், சென்னை, கீழ்ப்பாக்கம், மில்லர் சாலையில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில் 87,091 சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்களுடன் 2 தொகுதிகளாக ரூ.32.93 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இக்கட்டிடத்தின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்தூக்கிகள் போன்றவையும், குற்றவழக்கு தொடர்வுத்துறை இயக்ககத்தின் முதல் தளத்தில் இயக்குநர் அறை, பார்வையாளர் அறை, கலந்துரையாடல் அறை, தகவல் அறியும் சட்டப் பிரிவு, கணினிஅறை போன்றவைகளும், இரண்டாம் தளத்தில் நூலகம், காத்திருப்புக் கூடம், இணை இயக்குநர் அறைகள், கணினி அறை, கலந்துரையாடல் அறை, மின்னணு வழி வழக்குப்பிரிவு, மூன்றாம் தளத்தில் கூட்ட அரங்கம், சேவை அறை போன்றவை அமைகின்றன.

சட்டக் கல்வி இயக்ககத்துக்கான முதல் தளத்தில் ஆலோசனைக்கான காத்திருப்பு இடம், பதிவறை, பொருட்கள் வைப்பறை, இரண்டாம் தளத்தில் காணொளி கூட்டரங்கு, காத்திருப்புக் கூடம், அலுவலகப் பிரிவு, நூலகம், கணினி அறை, பதிவக அறை, மூன்றாம் தளத்தில் பயிற்சிக் கூடங்கள் போன்றவை அமைகின்றன.

கட்டிடங்கள் திறப்பு

மீன்வளத் துறை சார்பில் ரூ.24.92கோடியில் கட்டப்பட்டுள்ள மீன்விதைப் பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு கட்டிடங்கள் என ரூ.31.67 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x