Published : 21 Oct 2022 06:42 AM
Last Updated : 21 Oct 2022 06:42 AM

காலாட்படை மீதான பற்றை ஊக்குவிக்க ராணுவ வீரர்கள்: வெலிங்டனிலிருந்து டெல்லி வரை மோட்டார் சைக்கிள் பயணம்

குன்னூர்: காலாட்படை மீதான பற்றை ஊக்குவிக்கும் வகையில், வெலிங்டன் ராணுவ மையத்தை சேர்ந்த ராணுவவீரர்கள் வெலிங்டனில் இருந்து டெல்லிக்கு 9 நாட்களில் 3,100 கி.மீ., தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் அக்.16-ம்தேதி இந்திய ராணுவத்தின் காலாட்படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 75-வது காலாட்படை தினத்தின் சிறப்பு அம்சமாக காலாட்படை மீதான உணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டார் சைக்கிள் பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்திய ராணுவத்தின் 4 பிராந்தியங்களில் இருந்தும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி முகாமில் இருந்து ராணுவவீரர்கள் டெல்லிக்கு மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கினர். பேரணியை எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பேரணி குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்முகாஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்தனர். 1947-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி சீக்கிய படைப்பிரிவின் 1-வது பட்டாலியன் தலைமையிலான ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் ஸ்ரீநகரில் போரில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து ஜம்மு காஷ்மீர் கைப்பற்றப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் அக்.16-ம் தேதி ராணுவக் காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

மேஜர் ஜேம்ஸ் ஜோசப் தலைமையிலான மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் குழு, மற்ற 9 அணிகளுடன் சேர்ந்து 9 நாட்களில் 3,100 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளனர். ஷிமோகா, பெல்காம், புனே, நாசிக், மோவ், சித்தோர்கர், ஜெய்ப்பூர் வழியாக புதுடெல்லியை அடைய உள்ளனர். போரின் ராணி எனப்படும் காலாட்படை மீதான பற்றை ஊக்குவித்தல் மற்றும் ஒட்டுமொத்த மக்களிடையே இந்திய ராணுவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகிய நோக்கத்துடன் இந்தப் பயணம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x