Published : 21 Oct 2022 07:40 AM
Last Updated : 21 Oct 2022 07:40 AM

குளங்கள் புனரமைத்தலில் வழிகாட்டுதலை பின்பற்றாததால் மத்திய அரசின் ரூ.29.95 கோடி நிதி கிடைக்கவில்லை: தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தகவல்

சென்னை: 2021 மார்ச்சுடன் முடிந்த ஆண்டுக்கான தணிக்கைத் துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் வறட்சி ஏற்படும் பகுதியின்கீழ் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 49 நீர்ப்பாசன குளங்களை செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் பணிகள் ரூ.23.42 கோடி மதிப்பீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டச் செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் தமிழக அரசும் ஏற்க வேண்டும். இந்நிலையில், மத்திய அரசின் முதல் தவணை பங்கை பெற தமிழக அரசு அணுகியபோது, குறிப்பிட்ட நடைமுறையின்படி ஆவணங்களை பூர்த்தி செய்ய தலைமைப் பொறியாளர் தவறியதால், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.7.03 கோடியை மத்திய அரசு தாமதமாக வழங்கியது.

ஆனாலும், மத்திய அரசின் பங்குக்காக காத்திருக்காமல் திட்டத்தை தலைமைப் பொறியாளர்அலுவலகம் செயல்படுத்த தொடங்கியது. இதன் விளைவாக 2-வது தவணையை வெளியிடுவதற்கு முன்பு செய்யக் கூடிய அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட செலவான ரூ.11.72 கோடிக்கு பதிலாக, 2019-ம்ஆண்டு மார்ச் வரை ரூ.19.52 கோடிசெலவை தமிழக அரசு மேற்கொண்டது. செலவை மீறியதன் விளைவாக மத்திய அரசு ரூ.6.41 கோடிக்கு பதிலாக, ரூ.1.95 கோடி மட்டுமே வழங்கியது. அந்தவகையில் நிதிவெளியீட்டுக்கான மத்திய அரசின்வழிகாட்டுதல்களை பின்பற்றாததால், 49 குளங்கள் புனரமைத்தல் பணிகளுக்கு தமிழக அரசால் மத்திய அரசின் உதவியை பெற முடியவில்லை.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பணிகளை திட்டமிட தலைமைப் பொறியாளர் அலுவலகம் தவறியதாலும், ஒரே நேரத்தில் பணி மதிப்பீடு செய்யாததாலும் தமிழகம் முழுவதும் 151 நீர்ப்பாசன குளங்களில் செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் பணிகளுக்கு மத்திய உதவியான ரூ.29.95 கோடி கிடைக்காமல் போனது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர்கள் 9,023 விவசாயிகளுக்கு, தேவைக்கு அதிகமாக 5,89,680 கிலோ நெல் விதைகளை வழங்கி உள்ளனர். இதனால், நெல் விதைக்கு அளிக்கப்பட்ட மானியத்தை விட கூடுதலாக ரூ.1.33 கோடி செலவு ஏற்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x