Published : 31 Oct 2016 05:47 PM
Last Updated : 31 Oct 2016 05:47 PM
திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம்... மின்சாரம் இல்லை.. நகரின் பிரதான சாலைகளில் படகு போக்குவரத்து, சைதை மேம்பாலம் இருந்த இடம் தெரியவில்லை, விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது.. இப்படித்தான் ஸ்தம்பித்து போயிருந்தது சென்னை 2015 டிசம்பர் மழை. அந்த மழை ஏற்படுத்திய பயம் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாகவோ என்னவோ இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மக்கள் மனங்களில் பீதி தொற்றிக் கொண்டது.
கடந்த ஆண்டு பருவமழை வெள்ளம் மக்களுக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். பாடங்களுடன் சில மழை முகங்களையும் அடையாளப்படுத்திச் சென்றது. அப்படி அறிமுகமான பிரதீப் ஜானையும் மக்கள் இன்னமும் மறக்கவில்லை. எப்படி வானிலை அறிவிப்புகளை கேட்கத் தவறுவது இல்லையோ அப்படியே பிரதீப் ஜானின் தமிழ்நாடு 'தமிழ்நாடு வெதர்மேன்' ( >fb.com/Tamilnaduweatherman) என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் பார்க்கத் தவறுவதில்லை.
இதோ இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், பிரதீப் ஜானிடம் வடகிழக்கு பருவமழை தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்..
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணித்துக் கூறிவிட முடியாது. அக்டோபர் முதல் டிசம்பவர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் ஏற்படும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை, உருவாகும் புயல் அடிப்படையிலேயே மழையளவை கணிக்க முடியும். இப்போதைக்கு நவம்பர் முதல் வாரத்தில் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி வலுப்பெறுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். தெற்கு சீனக் கடலில் உருவாகும் புயல் சின்னங்கள் வங்கக் கடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவேளை அந்த புயல் வலுப்பெற்று அதன் தாக்கம் வங்கக் கடலில் தீவிரமாக இருந்தால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு தினங்களுக்கு கனமழை எதிர்பார்க்கலாம். இருப்பினும், அது கடந்த டிசம்பர் மழையைப் போல் தீவிர கனமழையாக இருக்குமா என்பதை இப்போதே கூற முடியாது.
பசிபிக் பெருங்கடலின் வெப்ப அளவு வழக்கமான வெப்ப அளவைக் காட்டிலும் 2 டிகிரி அதிகரித்தால் அதை எல் நினோ தாக்கம் என்றும் அதே வெப்பளவு 2 டிகிரி குறைவாக இருந்தால் அது லா நினோ தாக்கம் என்றும் கூறப்படுகிறது. அதுவே, வெப்ப அளவு மையமாக இருந்தால் அது என்சோ (ENSO) என்று அறியப்படுகிறது. இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை நியூட்ரல் நிலையில் இருக்கிறது. இருப்பினும், இந்த வெப்ப நிலை அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இப்போதைக்கு நியூட்ரல் நிலையில் இருப்பதால் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீ. அளவு பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது இப்போதைக்கான கணிப்பு மட்டுமே. டிசம்பர் இறுதிக்குள் தெற்கு சீனக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் சின்னங்களின் தாக்கத்தைப் பொறுத்து நிலவரங்கள் மாறும். இருப்பினும், மக்கள் தேவையற்ற அச்சங்களை தவிர்க்கவும்.
'தமிழ்நாடுவெதர்மேன்' என்றே உங்களுக்கு அடையாளம் இருக்கிறது. நீங்கள் ஏன் தமிழில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கக்கூடாது?
தமிழில் வானிலை அறிவிப்புகளை வழங்கக்கூடாது என்ற மனத்தடை எனக்கு இல்லை. எனக்கு தமிழில் தட்டச்சு தெரியாது. மேலும், ஆங்கிலத்தில் நான் தரும் மிகப்பெரிய வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து அவற்றை தட்டச்சு செய்து பதிவேற்றும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. ஏனெனில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதை நான் முழு நேரத் தொழிலாக செய்யவில்லை. எனது வானிலை முன்னறிவிப்புகளை எனக்காக யாரேனும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அதை எனது வலைப்பக்கத்தில் பகிரத் தயாராக இருக்கிறேன். இதை நான் பல முறை தெரிவித்துவிட்டேன். ஆனால், பொறுப்பை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதே எனது ஆதங்கம். சென்னை வானிலை ஆய்வு மையம்கூட தமிழில் முன்னறிவிப்புகளை அதன் இணையதளத்தில் வெளியிடுவதில்லையே..
உங்களுக்கான நம்பத்தகுந்த வானிலை நிலவர தகவல் ஆதாரம் என்ன?
ஐஎம்டி, ட்பிள்யுஆர்எஃப் போன்ற இணையதளங்களில் இருந்தே நானும் வானிலை நிலவரங்களை சேகரிக்கிறேன். இதைப்போல் இன்னும் ஆயிரக்கணக்கான வானிலை இணையதளங்கள் இருக்கின்றன. நாம் எந்த இணையதளத்திலிருந்து தகவலைத் திரட்டுகிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு பொறுப்புடன் தகுந்த ஆய்வுக்குப் பின்னர் அந்த தகவலை பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு பகிர்கிறோம் என்பதே முக்கியம். பொறுமையாக, துல்லியமாக தகவல்களை பகிர்தல் அவசியம்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருக்கும் அபிமானம் குறித்து..
டிசம்பர் 2015-ல் 1,2-ம் தேதிகளில் நான் பதிவு செய்திருந்த தகவல்களால் மக்கள் மத்தியில் என் மீதான நம்பிக்கை அதிகரித்தது. அதற்கு நான் ஏற்கெனவே சொன்னதுபோல் பொறுமையும், நிதானமுமே காரணம். ஒரு சில நேரங்களில் பெரிய அச்சுறுத்தலாக தோன்றும் வானிலை நிலவரம் அடுத்த சில நிமிடங்களில் திசை மாறலாம். எனவே, எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்னர் உறுதி செய்து கொள்வது சிறப்பு. உறுதிப்படுத்தப்பட்ட தகவலே நம்பகத்தன்மையை பெற்றுத்தரும். அதுவே மக்கள் அபிமானத்துக்குக் காரணம்.
மழை, பருவமழை தொடர்பான புரிதல்கள் மக்கள் மத்தியில் ஏற்பட என்ன செய்யலாம்?
மனிதன் எப்போதுமே தேவையின் அடிப்படையில் கற்றுக் கொள்வான். இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்க முடியாது. அப்படித்தான் வானிலை சார்ந்த தகவல்களையும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிக்கேற்ப தெரிந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு மழை, வெள்ளம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. எது நம்பத்தகுந்த தகவல் என்பது குறித்து புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்கதே.
பருவமழையை எதிர்கொள்ள நீங்கள் சொல்லவிரும்பும் டிப்ஸ்..
பெரிதாக ஒன்றுமில்லை. கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து முன்னறிவிப்பு வரும்போது வீட்டிலிருந்து வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளலாம். விழிப்புடன் இருந்தாலே பல இன்னல்களைத் தவிர்த்துவிடலாம்.
எதிர்கால லட்சியம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?
நான் கணினி அறிவியல் படித்தவன். ஆனால், வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது எனது தனிப்பட்ட விருப்பம். அந்த விருப்பம் எனது ஆயுள்காலம் முழுதும் தொடரும். மக்களுக்கு நன்மை தரும் வகையில் முன்னறிவிப்புகளைத் தருவது ஆன்ம திருப்தியளிக்கிறது. இதுவே போதுமானது.
உங்கள் குடும்பம், அலுவலகத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது?
பருவமழை காலங்களில் மட்டுமே அதிக அளவு வானிலை ஆய்வில் ஈடுபடுவேன். அதுவும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்திலேயே எனது நேரத்தை கூடுதலாக இதற்கென செலவிடுகிறேன். காலை எழுந்தவுடன் ஓர் அறிவிப்பு, இரவு படுக்கும் முன் ஓர் அறிவிப்பு என இரண்டு அறிவிப்புகளை மட்டுமே தருவேன். அலுவலகத்திலிருந்து வானிலை முன்னறிவிப்புகள் தருவதில்லை. ஆனால், ஏதாவது நெருக்கடியான சூழல் என்றால் மக்கள் நலன் கருதி நான் முன்னறிவிப்புகளை பகிர அலுவலகம் ஒருபோதும் தடை போட்டதில்லை.
நீங்கள் தரும் முன்னறிவிப்புகளுக்கு மண்டல வானிலை ஆய்வு மையத்திலிருந்து எப்போதாவது எதிர்ப்பு வந்திருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. வானிலை ஆய்வு மையத்தில் முன்னறிவிப்புகளை வெளியிடுவது தொழில்ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. எனது பகிர்வுகள் எல்லாம் என் சுய விருப்பதின் அடிப்படையிலானது. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் வானிலை நிலவர அறிவிப்பு ஒன்றை வெளியிட முடியும். அது அவர்களால் முடியாது. மேலும், தமிழகத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமான அறிவிப்பை மட்டும் என்னால் பகிர முடியும் ஆனால் வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதுக்குமான அறிவிப்பையே வெளியிடும். அவர்கள் பார்ப்பது வேலை. நான் செய்வது பயனுள்ள பொழுதுபோக்கு. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதனால், அவர்கள் என் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடுவதில்லை. சொல்லப்போனால், வானிலை ஆய்வு மையத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வானிலை தொடர்பான வதந்திகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுப்புணர்வு வேண்டும். நாம் சொல்லும் சேதி பிறருக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. அதேவேளையில் பொறுப்பற்ற நபர்களின் வாதங்களை புறந்தள்ளும் அளவுக்கு நமக்கு விழிப்புணர்வு வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT