Published : 20 Oct 2022 07:13 PM
Last Updated : 20 Oct 2022 07:13 PM
மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற ஆர்டிஐ கேள்விக்கு ''தேதி சம்பந்தமான தகவல்கள் எதுவுமில்லை'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிறுவனத்திடம் கடன் பெறுவதே இந்தத் திட்டத்திற்கான பின்னடைவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்கி இருப்பது மட்டுமே இந்தத் திட்டத்திற்கான ஒரே நம்பிக்கையாகவும், ஆறுதலாகவும் உள்ளது. பிரதமர் மோடி 2019-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 2022-க்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ''தகவல் அறியும உரிமைச்சட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த பதிலில், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும் எனவும், கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும் எனவும், 20 சதவீதத் தொகையான 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும் எனவும், சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது எனவும், அதற்காக 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT