Published : 20 Oct 2022 06:49 PM
Last Updated : 20 Oct 2022 06:49 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அறிவித்துள்ளதுபோல் தெலங்கானாவில் மக்கள் குறைகளை கேட்கப்போவதாக ஆளுநர் தமிழிசையால் அறிவிக்க முடியுமா என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை அங்கு மக்கள் குறைகளை கேட்பதாக கூறுகிறார். அவர் அனுப்பிய புத்தகத்தில் அதுபோன்ற தகவல்கள் இல்லாததால், இது சம்பந்தமாக ஹைதராபாத்திலுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அங்குள்ள பத்திரிக்கையாளர்களை கேட்டபோது அவர் தெலங்கானா ஆளுநராக வந்த பிறகு அப்படிப்பட்ட எந்த நிகழ்வும் நடைபெறவில்லை எனத் தெளிவாக கூறியுள்ளனர். அவர் அளித்த புத்தகத்திலும் அதுபோல் ஏதும் தகவல் இல்லை.
நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன் இப்போது தெலங்கானாவில் பொதுமக்கள் குறைகளை கேட்கப்போகிறேன் என அறிவிக்க இயலுமா? அவரவர் அவர்களது அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டும். தெலங்கானாவின் முழுநேர ஆளுநரான தமிழிசை ஏன் புதுவையிலேயே தங்கி உள்ளார். அங்கு ஏன் செல்வதில்லை. தெலங்கானாவில் மாநில அரசு விழாக்களில் அவருக்கு அழைப்பு வருவதில்லை என்பதே காரணம். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் தொல்லை தருவதில் ஆளுநர்கள் ஓர் அங்கம் வகிக்கின்றனர். புதுச்சேரியில் ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது பற்றிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை தமிழிசைக்கு அனுப்பியுள்ளேன்.
தமிழகத்தை போல புதுவையிலும் ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். புதுவையில் புது கலாச்சாரமாக பப் ஆரம்பித்துள்ளது. இங்கு ஹூக்காவில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுவை கலாசாரம் ரங்கசாமி ஆட்சியில் சீரழிந்து வருகிறது. பப் அருகில் வசிப்பவர்கள், பப்புகளில் எழுப்பப்படும் அதிக சத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு புதுவை அரசுக்கு நிதி கொடுத்திருந்தால் அதனை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டியதுதானே. ஏன் மூடு மந்திரமாக வைத்துள்ளார்கள். சபாநாயகர் தற்போது 3 வது சூப்பர் சிஎம் ஆக செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT