Published : 20 Oct 2022 04:01 PM
Last Updated : 20 Oct 2022 04:01 PM
சென்னை: "தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பயணம் நிறைவுபெற்று, 4-ம் ஆண்டு தொடக்க விழா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், புத்தகத்தை வெளியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: "என்னுடைய பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகின்றனர். என்னை குடியரசு தினத்தன்று கொடியேற்றவிடவில்லை. எனவே, நான் ராஜ்பவனுள் மட்டுமே கொடியேற்றினேன். ஆளுநர் உரை ஆற்றவும் விடவில்லை. ஆனால், இவை எப்படியிருந்தாலும், நான் என் பணியில் இடையூறு செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இடைவெளியும் விடவில்லை.
எனக்கு தெரிந்த ஒருவர், “தமிழிசை எப்போது பார்த்தாலும் இங்குதான் இருக்கிறார். அவர் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அந்த இரண்டு மாநிலங்கள் என்ன ஆவது?” என்று கேள்வி கேட்டார். இரண்டு மாநிலங்களிலும் எதுவும் ஆகவில்லை. எப்போது பார்த்தாலும் தெலங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியில் இருப்பதாக கூறுகின்றனர். புதுச்சேரிக்கு வந்தால், அண்ணன் நாராயணசாமி, தெலங்கானாவில் விரட்டிவிட்டார்களா? எப்போது பார்த்தாலும் புதுச்சேரியிலேயே இருப்பதாக கேட்கிறார். இங்கிருப்பவர்கள் மற்ற இரண்டு மாநிலங்கள் என்ன ஆவது என்று கேட்கின்றனர்.
இன்றைக்குச் சொல்கிறேன்... தெலங்கானாவில் முழுமையாக பணியாற்றுகிறேன். புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையான அன்பைச் செலுத்துகிறேன். அவ்வளவுதான்.
உங்களை அந்த மாநிலங்களில் விரட்டுவதால், தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள், வாலை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT