Published : 20 Oct 2022 07:30 AM
Last Updated : 20 Oct 2022 07:30 AM

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது: அகர்வால் மருத்துவமனை அறிவுறுத்தல்  

சென்னை: கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை பிராந்திய தலைவர் சவுந்தரி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடிக்கும்போது, கண் காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் ஏற்படும் காயங்களின் தீவிர தன்மையானது, லேசான எரிச்சலில் இருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கிற கருவிழி சிராய்ப்புகள், பார்வை திறன் இழப்புக்கும் வழிவகுக்கிறது. பட்டாசுகளில் உள்ள வேதிப் பொருட்கள் மற்றும் தொடர் புகை, தொண்டையிலும், கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி, கண்களில் நீர்வழிய செய்யும். பட்டாசு வெடிக்கும்போது வெளிவரும் புகை, தொண்டை அழற்சியோடு, பிற தொற்று பாதிப்பையும் ஏற்படுத்தும். குறிப்பாக மத்தாப்புகள் மிக ஆபத்தானவை. தங்கத்தை உருக்கும் உயர் வெப்ப நிலையில் எரிவதால், கான்டாக்ட் லென்சுகள் கண்களுக்கு எரிச்சலை விளைவிக்கும். இதனால், பட்டாசுகள் வெடிக்கும்போது, கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மருத்துவர் எஸ்.சவுந்தரி

பட்டாசுகளால் கண்களில் கருவிழி காயம், மூடிய நிலை கருவிழி காயம், துளையுடன் கூடிய காயங்கள் ஏற்படும். இதுபோன்ற காயங்கள்ஏற்பட்டால், கண்களை தேய்க்கவோ அல்லது கண்களை சொறியவோ கூடாது. கண்களையும், முகத்தையும் நன்றாக கழுவ வேண்டும். கண்ணில் எரிச்சல் அல்லது வேறு பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, கண்களை நீரால் தொடர்ந்து அலச வேண்டும். கண்களில் துகள் இருந்தால், அவற்றை நீங்களே எடுக்க முயற்சிக்க வேண்டாம். கண்களை மூடிய நிலையில், உரிய கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பட்டாசு வேதிப்பொருட்கள் கண்களில் பட்டால் 30 நிமிடங்களுக்குள் அவற்றை நீரைக் கொண்டு அலசிய பிறகு, மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வலி நிவாரணி மருந்துகள், ஆயின்மென்டை பயன்படுத்தக் கூடாது. கண் கவசங்களை அணிந்து, திறந்தவெளி இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீரைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும். அவசர தேவைக்கு 044-43008800 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x