Published : 20 Oct 2022 07:04 AM
Last Updated : 20 Oct 2022 07:04 AM

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கியதாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தொழிலதிபரை அவரது காதலியுடன் கடத்தி வைத்து சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கியதாக அண்ணாநகர் உதவி ஆணையர் மற்றும் திருமங்கலம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்(29). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி அனிமேஷன் தொழில்நுட்பம் பயின்ற ராஜேஷ், கடந்த 2013-ம் ஆண்டு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, பிபிஓ சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் வெங்கடேஷ், ராஜேஷுக்கு கொடுக்க வேண்டிய ரூ.5.5 கோடியைக் கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்துள்ளார். தனக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தனது நிறுவனத்தையும் சிவா என்பவருக்கு வெங்கடேஷ் கைமாற்றியுள்ளார். இந்நிலையில் சிவாவை ஏமாற்றிப் பெற்ற பல கோடி ரூபாயை ராஜேஷிடம் வெங்கடேஷ் கொடுத்து வைத்ததாகவும், அந்த தொகையில் ராஜேஷ் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் வீடுகளை வாங்கி போட்டதாகவும் போலீஸார் குற்றம்சாட்டி, ராஜேஷை அவரது காதலியுடன் கோவைக்கு கடத்தியுள்ளனர். பின்னர் செங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து அவரது சொத்துகளை சிவா பெயருக்கு எழுதி வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், போலீஸ்காரர்களான கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி ஆணையர் சிவக்குமார் முன்ஜாமீன் பெற்றதால் அவரைத் தவிர்த்து மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தன்னை மிரட்டியதாக கூடுதல் ஆணையர் தினகரன் மீதும் குற்றம்சாட்டி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநில போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான வழக்கை மாநில போலீஸாரே விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முகாந்திரம் உள்ளது" எனக்கூறி வழக்கின் தீர்ப்பைத் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். மனுதாரர் முழுமையான நீதியைப் பெற வேண்டுமெனில், இந்த விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ தனது விசாரணையை 6 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x