Published : 20 Oct 2022 06:26 AM
Last Updated : 20 Oct 2022 06:26 AM

இந்தியாவின் உதவியை பெற்று இந்தியாவுக்கே ஜவுளி ஏற்றுமதி செய்யும் வங்கதேசம்: 5 மாதங்களில் ரூ.2,800 கோடி மதிப்புக்கு வர்த்தகம்

இல.ராஜகோபால்

கோவை: பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடு என்ற காரணத்தால் இந்திய அரசு வழங்கியுள்ள இறக்குமதி வரி ரத்து உள்ளிட்ட சலுகைகளை பெற்று, இந்தியாவுக்கே ஜவுளிப்பொருட்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்ற காரணத்தால் வங்கதேசத்துக்கு இந்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அந்நாடு இறக்குமதி செய்யும் காடா துணிகளுக்கு சலுகை அளித்துள்ளது. அதேபோல் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்கப்படாது. இந்த வரிச் சலுகைகளை பயன்படுத்தி இந்தியாவின் காடா துணியை கொண்டு பல்வேறு ஆயத்த ஆடை ரகங்களை வடிவமைத்து இந்தியாவுக்கே அதிகளவு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது வங்கதேசம்.

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் உள்ள (சாப்டா) வர்த்தக ஒப்பந்தத்தால், வங்கதேசம் ஆயத்த ஆடைகளை இந்தியாவுக்கு வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் ஆயத்த ஆடை உற்பத்தி கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளாக வங்கதேசம் பலப்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு 42 பில்லியன் டாலர் மதிப்புக்கு, அதாவது ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்களை பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வங்கதேசம் வளர்ச்சியடைந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித்தொழிலில் உலகளவில் சிறந்து விளங்கும் இந்தியாவை நோக்கியும் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற ஜவுளிப் பொருட்களை, இந்தியாவில் உள்ள பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்கள் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்கின்றன.

கடந்த 5 மாதங்களில் ரூ.2800 கோடி மதிப்பிலான ஜவுளிப்பொருட்களை இ்ந்தியாவுக்கு வங்கதேசம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டில், இந்தியாவில் பருத்தி விலை, மற்ற உலக நாடுகளை விட அதிகமாக இருந்ததால், நம்முடைய ஜவுளிப் பொருட்கள் விலையும் உயர்ந்துகாணப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவு ஆயத்த ஆடைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. எதிர்வரும் காலங்களில் இறக்குமதி மேலும் அதிகரிக்கும். இந்தியாவில் தற்போது மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது. ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை நவீனப்படுத்தி போட்டித்திறனை அதிகப்படுத்தினால் உலக சந்தையில் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் போட்டியை சமாளிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவில் இருந்து வங்கதேசம் இறக்குமதி செய்யும் காடா துணிகளுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஆயத்த ஆடைகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x