Published : 20 Oct 2022 06:16 AM
Last Updated : 20 Oct 2022 06:16 AM
சென்னை: பொதுவெளியில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி நீதித் துறை, நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் குறித்து நேர்காணல் நடத்தும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதித் துறை, நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களி்ல் கருத்துகளை வெளியிட்ட வழக்கில் கைதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இந்த வழக்கில் தமிழக டிஜிபியை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, அவதூறாக இணையதளங்களில் கருத்துகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இணையதள குற்றங்களை கண்காணிக்க சிறப்புப் பிரிவை ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி தரப்பில், ‘‘எல்காட்சார்பில் ரூ.22.64 கோடி செலவில் சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் குறித்து அரசிடம் முன்மொழிவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களை வாங்க அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ‘‘பொது வெளியில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி நீதிபதிகள், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் குறித்து நேர்காணல் நடத்தி கருத்துகளை தெரிவிக்கும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அதற்கு எதிர்மறையாகவோ அல்லது நேர் மறையாகவோ கூறும் கருத்துகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மலிவான விளம்பரத்துக்காக, இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் காளான்களைப் போல பரவி விடுவர். சமூக அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தைப் பேண நீதித் துறை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. இதற்காக சில விதிமுறைகளை வகுக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை நவ.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT