Published : 20 Oct 2022 06:06 AM
Last Updated : 20 Oct 2022 06:06 AM

பள்ளிக்கல்வி, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சார்பில் தமிழகத்தில் ரூ.11,253 கோடியில் புதிய திட்டங்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வி, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.11,253 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகள், 7,500 கி.மீ. சுற்றுச்சுவர், பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.2,200 கோடி என மொத்தம் ரூ.12,300 கோடி நிதி தேவை எனக் கண்டறியப்பட்டு, இத்திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில், நடப்பாண்டுக்கு ரூ.1,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் மாணவர்களுக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ரூ.800 கோடியில் 6 ஆயிரம் வகுப்பறைகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகள் என ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டில் கட்டப்படும். பள்ளிகளின் பராமரிப்புக்காக கூடுதலாக ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக, அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு, 4,600 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும். இதுதவிர, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானியத் திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, ரூ. 7,388 கோடியில், 16,390 கி.மீ. நீள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

1,000 புதிய பேருந்துகள்

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதால், தினசரிசராசரியாக 44 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இதன்மூலம் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் கோடி சேமிப்பாக மாறியுள்ளது. ரூ.500 கோடியில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஜெர்மன் வளர்ச்சிவங்கி நிதியுதவியில் 2,213 டீசல் பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கவும், உலக வங்கி உதவியுடன் மேலும் 1,000 பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் கோடி சேமிப்பாக மாறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x