Published : 20 Oct 2022 06:20 AM
Last Updated : 20 Oct 2022 06:20 AM
சென்னை: தமிழகத்தில் ஜிஎஸ்டி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் 1,403 இனங்களில் ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக, சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
2019-20-ம் ஆண்டில் மாநில அரசு ஈட்டிய வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி. இது மொத்த வருவாயில் 69 சதவீதமாக இருந்தது. இதில் ஆண்டு வருவாயின் எஞ்சிய 31 சதவீதம், அதாவது, ரூ.54,176 கோடி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. மாநில அரசின் மொத்த வருவாய் ரூ.1.75 லட்சம் கோடியாகும்.
2019-20-ம் ஆண்டில் ஜிஎஸ்டி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம், நில வருவாய் சம்பந்தமான பதிவுருக்களை ஆய்வு செய்ததில் 1,403 இனங்களில் ரூ.236.63 கோடிக்கு குறைவான வரி மதிப்பீடு
கள், குறைவாக வரி விதித்தல், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூ.80.78 கோடி வரி செலுத்தவில்லை. மின்னணு வழிப் பட்டியல் தயாரித்தவர்கள் ஜிஎஸ்டி ஆர்3பி படிவம் தாக்கல் செய்யாததுடன் ரூ.49.43 கோடி வரி செலுத்தவில்லை. வரி இல்லை என கணக்கு தாக்கல் செய்தவர்கள் மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு ரூ.8.22 கோடி வரி செலுத்தவில்லை.
25 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.20 கோடிக்கு மாறுதல் தீர்வை கூடுதல் வரி தவறாக, அதிகமாக ஒதுக்கப்பட்டது கண்டறியப் பட்டது. பதிவு அதிகாரிகள் ஆவணங்களை தவறாக வகைப்படுத்தியதால் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ரூ.1.09 கோடியாக குறைவாக வசூலிக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின்படி, 40 முகவர்கள் குறித்த தேதிக்குப் பிறகு வரி செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மதிப்பீட்டு அலுவலர்கள் இதை கவனிக்காததால், தாமதமாக செலுத்தப்பட்ட ரூ.4.16 கோடி வரிக்கு ரூ.48.88 லட்சம் வட்டி வசூலிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT