Published : 20 Oct 2022 06:04 AM
Last Updated : 20 Oct 2022 06:04 AM
சென்னை: சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்பட அதிமுகவினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சியை உடைக்க சதி நடப்பதாக போராட்டத்தின்போது இபிஎஸ் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, ஆர்.பி.உதயகுமாரை அப்பொறுப்பில் அமர்த்தியுள்ளதாக, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலர் பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்தார். இதேபோல, ஓபிஎஸ் தரப்பிலும், கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், பேரவைக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்
கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். இதைக் கண்டித்து பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட் டனர்.
இதையடுத்து, ‘‘பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அக். 19-ல் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’’ என்று பழனிசாமி அறிவித்தார். ஆனால், இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். எனினும், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். இதையொட்டி, ஏராளமான போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
அங்கு காலை 9 மணிக்கு வந்த பழனிசாமி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்த போதிலும், தடையை மீறி அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், டி.ஜெயக்குமார், எஸ்பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் 60 எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 1,300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பழனிசாமி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை பழச்சாறு குடித்து பழனிசாமி மற்றும் கட்சியினர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸார் மாலையில் விடுவித்தனர்.
நடுநிலையுடன் செயல்படவில்லை
இதற்கிடையே, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணைச் செயலராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், அதிமுக எம்எல்ஏ-க்கள் 62 பேர் ஏகமனதாகத் தேர்வுசெய்து, அவர்களுக்கு பேரவையில் உரிய இருக்கை ஒதுக்க வேண்டுமென்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை
வைத்தோம். ஆனால், தற்போது பேரவையில் ஏற்கெனவே உள்ள நிலை தொடரும் என்று அறிவித்துள்ளார். அவர் நடுநிலையுடன் செயல்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படியே செயல்படுகிறார். பேரவை மரபையும், மாண்பையும் சட்டப்பேரவைத் தலைவர் மீறி, எங்களது கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டுவிட்டார். அப்படி நீக்கப்பட்டவரை, அதிமுகவின் துணைத் தலைவராக எப்படி அறிவிக்க முடியும்? அதிமுக பொதுக்குழுக் கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என்று நீதிபதி துரைசாமி கூறியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையிட்ட போதிலும், தடையாணை வழங்கவில்லை. எனில், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறையில் உள்ளது என்று அர்த்தம். நடைமுறையில் உள்ள தீர்ப்புக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவர் எப்படி செயல்பட முடியும்?
அதிமுகவை வீழ்த்த நினைத்தால்...
அதிமுகவை எதிர்கொள்ளத் திராணி இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், பன்னீர் செல்வத்தைப் பயன்படுத்தி, கட்சியை உடைக்கப் பார்க்கிறார். சட்டப்பேரவையில் ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் அரைமணி நேரம் சந்தித்துப் பேசியுள்ளனர். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அதிமுகவை வீழ்த்த நினைத்தால், நீங்கள்தான் வீழ்ந்து போவீர்கள். நீங்கள் எவ்வளவு அடக்குமுறையை செய்தாலும், அதை தகர்த்து எறியக்கூடிய சக்தி அதிமுகவுக்கு இருக்கிறது. எதையுமே சாதிக்க முடியாத, திறமையற்ற முதல்வரை தமிழகம் பெற்றிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
போலீஸாரிடம் வாக்குவாதம்
செய்தியாளர்களுக்கு பழனிசாமி பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட போலீஸார், ‘‘இப்போது பேட்டி கொடுக்கக் கூடாது. வெளியே சென்ற பின்னர், செய்தியாளர்களை சந்தியுங்கள்’’ என்றனர். உடனே, ஆவேசமடைந்த பழனிசாமி, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் அங்கிருந்து சென்றனர். தடையை மீறி போராட்டம் நடத்திய பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜி.கே.வாசன் சாலை மறியல்
இதற்கிடையே, பழனிசாமியை சந்திக்க வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், ருக்மணி லட்சுமிபதி சாலையில் மறியலில் ஈடுபட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பழனிசாமி மற்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்துக்கு விரோதமானது’’ என்றார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அங்கு வந்தபோது, பழனிசாமியை சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT