Published : 19 Oct 2022 04:38 PM
Last Updated : 19 Oct 2022 04:38 PM
சென்னை: செய்யாத பணிகளுக்கு ரூ.11 கோடியை ஒப்பந்ததாரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடாக வழங்கி உள்ளதாக கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முடிவு செய்து கடந்த 2016ம் ஆண்டு ஜிஎஸ்டி லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒரு பக்கத்திற்கு ரூ.46 என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களின் மதிப்பெண் விவர தொகுப்பு தவிர்த்து மற்ற ஆவணங்களை டிஜிட்டல் மயம் ஆக்க மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தவிர்த்து மதிப்பெண் விவர தொகுப்புகளை டிஜிட்டல் மயம் ஆக்க மேட்ரிக்ஸ் இன்க் என்ற நிறுவனத்திற்கு, பக்கத்திற்கு ரூ.25 என்ற விலையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இதன்படி 2012 முதல் 2016ம் ஆண்டு கல்வி பதிவேடுகளை டிஜிட்டல் மயம் ஆக்க ரூ.11.41 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜிஎஸ்டி நிறுவனம் 7,33,722 பதவிகளை மட்டுமே டிஜிட்டல் மயம் ஆக்கியுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு 20,92, 305 பதிவுகளை டிஜிட்டல் மயம் ஆக்கியதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எந்தப் பதிவுகளையும் டிஜிட்டல் மயம் ஆக்காத மேட்ரிக்ஸ் இன்க் நிறுவனத்திற்கு 1,20,000 பதிவுகளை டிஜிட்டல் மயம் ஆக்கியதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செய்யாத பணிகளுக்கு ரூ.11.41 கோடியை ஒப்பந்ததாரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடாக வழங்கி உள்ளதாக கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT