Published : 24 Nov 2016 09:09 AM
Last Updated : 24 Nov 2016 09:09 AM
இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அக்டோபர் 1-ம் தேதிமுதல் நவம்பர் 23 வரை இயல்பைவிட 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இந்நிலை நீடித்தால் 1974-ம் ஆண்டு மழைப் பொழிவு மிகவும் குறைந்து வறட்சி ஏற்பட்டது போல இந்தாண்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு முன்னாள் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். ஒவ் வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்கும்போது, பல் வேறு காரணிகள் கணக்கில் கொள் ளப்பட்டு வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்குமா அல்லது குறையுமா என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவிக்கும்.
இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. “இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செ.மீ. வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அக்டோபர் மாதம் 181.1 மி.மீ., நவம்பரில் 171.7 மி.மீ., டிசம்பரில் 89.2 மி.மீ. ஆக மொத்தம் 442 மி.மீ. மழை பெய்தால், அதுதான் இயல்பான அளவாகும். கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் (676.1 மி.மீ.) அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது.
கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்திலும் இயல்பைவிட (320 மி.மீ.) குறைவான அளவே அதாவது 250 மில்லி மீட்டர்தான் மழை பதிவானது. இது இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும்.
போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல் ஒய்.ராஜ் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
கடந்த 45 ஆண்டுகளில் 1974 மற்றும் 1995-ம் ஆண்டுகளில்தான் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட மிகக் குறைவாக பெய்துள்ளது. 1974-ம் ஆண்டில் சராசரி மழையைவிட 34 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு 1995-ம் ஆண்டில் சராசரி மழையைவிட 15 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. அந்த ஆண்டில் இயல்பைவிட வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்தபோதிலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்தில் இயல்பைவிட 69 சதவீதம் மழை அதிகமாகப் பெய்தது. அதையடுத்து தென்மேற்குப் பருவ மழையும் இயல்பைவிட 5 சதவீதம் கூடுதலாக இருந்தது. அதனால் தமிழகத்தில் பாதிப்பும் குறைவாக இருந்தது.
இந்தாண்டு அக்.1-ம் தேதிமுதல் இன்றுவரை (நவ.23) இயல்பைவிட 69 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்தில் 1974-ம் ஆண்டு நிலைமை (கடும் வறட்சி) ஏற்படும். வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் 5 வாரமே உள்ள நிலையில் 150 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். அடுத்து வரும் 5 நாட்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஒய்.ராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT