Published : 19 Oct 2022 01:26 PM
Last Updated : 19 Oct 2022 01:26 PM
சென்னை: தமிழக அரசு இதுவரை 3337 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், இதில் 78 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணைகள், வெளியிடப்பட்டு உள்ளதாகவும் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன் பேசுகையில், " தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திட செய்திடவும் நாள்தோறும் எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம், பொருளாதாரம், அரசியல், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயமாக்கத்தைக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
சமூக மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒருசேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இது தமிழகத்தை மேம்படுத்தும் என்பதையும்தாண்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் அறிவிப்புகள் மட்டுமின்றி, அறிவிக்காத பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட ஆய்வு பயணங்களின்போது வெளியிட்ட 77 அறிவிப்புகள், எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள், அமைச்சர்களால் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட 2465 அறிவிப்புகள், என மொத்தம் 3337 அறிவிப்புகள், தமிழக அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கைகள் கவனமாக கண்காணிக்கப்பட்டு, உரிய மேல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன. அதன்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு அதாவது 2607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள், அறிவுரைகள் வெளியிடப்பட்டு அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1816 அறிவிப்புகள் அதுதொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 54 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment