Published : 19 Oct 2022 12:24 PM
Last Updated : 19 Oct 2022 12:24 PM

கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்களை சிபிசிஐடி விசாரிக்கும் உத்தரவு மாற்றியமைப்பு: உயர் நீதிமன்றம் 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றி, இனி சம்பந்தப்பட்ட போlலீஸாரே விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டுமெனவும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீஸாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "ஜூலை 18ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு பின்னர், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.

முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக பிரிவு உருவாக்கப்பட்டது. எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீஸாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்ற நீதிபதி, "கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்து உத்தரவிட்டார். இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாரே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவையும் நீதிபதி மாற்றியமைத்தார். வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்.மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x