Last Updated : 16 Nov, 2016 07:50 AM

 

Published : 16 Nov 2016 07:50 AM
Last Updated : 16 Nov 2016 07:50 AM

கூட்ட நெரிசலை சமாளிக்க இருக்கை, குடிநீர் வசதியுடன் மண்டபத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை: முன்னுதாரணமாக திகழும் ஐஓபி வங்கி

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் சிரமத்தைப் போக்க, மண்டபத்தில் அனைவரையும் அமரவைத்து எவ்வித நெரிசலும் இன்றி அவர்களுக்கு பணம் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மந்தைவெளி, ஆர்.கே.நகர் கிளை ஏற்பாடு செய்துள் ளது. இச்சேவை மற்ற வங்கிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய நோட்டு களை வங்கியில் செலுத்தி மாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த ஒருவாரமாக அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. வாடிக்கையாளர் கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற பலமணி நேரம் கால்கடுக்க நிற்கின்றனர். வங்கி ஊழியர்களும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில், மந்தை வெளி, ஆர்.கே.நகர் சிருங்கேரி மடம் சாலையில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் கூட்டத்தை சமாளிக்க அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எங்கள் வங்கியில் 12 ஆயிரம் சேமிப்புக் கணக்குகளும், 5 ஆயிரம் ஜன்தன் யோஜனா கணக்குகளும், 700 நடப்புக் கணக்குகளும் உள்ளன. இதனால், எப்போதும் கூட்டம் அலைமோதும். மேலும், வங்கி சிறிய கட்டிடத்தில் செயல்படுவதால் சிலர் மட்டுமே உள்ளே நிற்க முடியும். இந்நிலையில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எங்கள் வங்கியில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் வங்கிக்கு வெளியே வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் அவதிப்பட்டனர்.

முதல் 2 நாட்கள் வாடிக்கையாளர் களுக்கு வெளியே இருக்கை வசதி செய்து கொடுத்தோம். இருப்பினும் அவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டனர். அந்த சமயத்தில் எங்கள் வங்கியை ஒட்டியுள்ள மண்டபத்தின் உரிமை யாளர் தன்னுடைய மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். இதையடுத்து, இந்த மண்டபத்தில் அமர வைத்து வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கி வருகிறோம். இதன் மூலம் வங்கியில் கூட்ட நெரிசல் குறைந்துள்ளதோடு, வாடிக்கையாளர் களும் எவ்வித கஷ்டமும் இன்றி பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ராமகிருஷ்ணன் என்ற முதியவர் இதுபற்றி கூறும்போது, ‘எனது சேமிப்புக் கணக்கு மைலாப்பூர் வங்கிக் கிளையில் உள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு என்னால் பணத்தை மாற்ற முடிய வில்லை. அப்போதுதான் இந்தக் கிளையில் இதுபோன்ற சவுகரியங்கள் செய்யப்பட்டிருப்பதாக அறிந்து இங்கு வந்தேன். எவ்வித சிரமமும் இன்றி பணத்தை மாற்றிக் கொண்டேன்’’ என்றார்.

எஸ்.லஷ்மி என்ற பெண் கூறும்போது, ‘‘பொதுமக்கள் தங்கள் பணத்தை மாற்ற பல்வேறு வங்கிகளில் பலமணி நேரம் கால்கடுக்க நிற்கின்றனர். ஆனால், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் எங்களுக்கு எவ்வித கஷ்டமும் ஏற்படவில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x