Published : 19 Oct 2022 05:03 AM
Last Updated : 19 Oct 2022 05:03 AM
சென்னை: தமிழகத்தில் இந்த நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கு ரூ.3,796 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், கூடுதல் செலவினங்களுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் அவர் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:
இந்த 2022-23-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணைப் பணிகள் குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களுக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும். அந்த வகையில், ரூ.3,795.72 கோடி நிதியை ஒதுக்க இந்த துணை மதிப்பீடுகள் வழிசெய்கிறது. இதன் முக்கிய அம்சங்கள்:
> போக்குவரத்து துறையில் சொத்துகளை உருவாக்க, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.500கோடி அனுமதிக்கப்பட உள்ளது.
> நகர்ப்புற பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு முதல்தவணையாக ரூ.550 கோடி மானியம் அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
> சென்னை பெருநகர், புறநகரில்வெள்ளத் தடுப்பு பணிக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் ரூ.373.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
> சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம்பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத் தணிப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ.134.22 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
> கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 7 பாசனக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.104.13 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில்ரூ.29.76 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. துணை மதிப்பீடுகளில் நீர்வளத் துறையின் கீழ் மொத்தமாகரூ.336.38 கோடி சேர்க்கப்பட்டுள் ளது.
> சென்னை வெளிவட்டச் சாலை (பகுதி-1) திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி இழப்பீடுவழங்க கூடுதலாக ரூ.227.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. துணை மதிப்பீடுகளில் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை கீழ் மொத்தமாக ரூ.369.74 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
> இந்த 2022-23-ம் கல்வி ஆண்டில் 28 சிறப்பு பள்ளிகளை நிறுவ ரூ.169.42 கோடிக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையின் கீழ் ரூ.100.82 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
> கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான, ஆதாய விலை நிலுவை தொகையை வழங்குவதற்காக கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைமுன்பணமாக ரூ.252.29 கோடியைஅரசு அனுமதித்துள்ளது. இத்தொகை வேளாண்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
> திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் நிதியில் இருந்து ரூ.168 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை வீட்டுவசதி துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
> அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முன்னோடி திட்டமான முதல்வரின் காலை உணவுதிட்டத்துக்கு ரூ.33.56 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை சமூக நலத் துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
> உபகரணங்கள் கொள்முதல் செய்ய 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு ரூ.97.05 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றில் சில இனங்களில் சம்பந்தப்பட்ட துறையின் கீழ் சேர்க்கப்பட்ட தொகை போக எஞ்சிய தொகை, மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதிஒதுக்கத்தில் செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT