Last Updated : 19 Oct, 2022 06:09 AM

2  

Published : 19 Oct 2022 06:09 AM
Last Updated : 19 Oct 2022 06:09 AM

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: உயர் நீதிமன்ற உத்தரவால் அகதிகள் மகிழ்ச்சி

வாசுகி

மதுரை: இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் இலங்கை தமிழர்களுக்கும் பொருந்தும் என்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவால் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் 1980-களில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 அகதிகள் முகாம்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். 2010 முதல் 2022 மார்ச் மாதம் வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் இந்திய குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் 2020 ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.

இலங்கை தமிழர்கள் கோரிக்கை: இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் சிறுபான்மை மதமாக உள்ள இந்து மதத்தினர் சேர்க்கப்படவில்லை. இவர்களையும் இச்சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் இலங்கை தமிழர்களுக்கும் பொருந்தும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் காலம் கணிந்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் எஸ்.அபிராமி(29). இவரது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இலங்கையில் இனக் கலவரம் நடைபெற்றபோது அபிராமியின் பெற்றோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். திருச்சியில் 14.12.1993-ல் அபிராமி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமைக்காக 2009-ல் இருந்து போராடி வருகிறார். தனது இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்ப திருச்சி ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் அபிராமி வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு: இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை சேர்க்கப்படவில்லை. இருப்பினும் இச்சட்டம் இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்து தமிழர்கள் ஆவர். அந்த அடிப்படையில் அபிராமியின் மனுவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமுருகன் கூறியதாவது: இலங்கை அகதிகள் இங்கு படிக்கலாம், ஆனால், அரசு வேலை வாய்ப்பு கிடையாது. வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அகதிகள் முகாமில் இருந்து அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் வெளியே எங்கும் செல்ல முடியாது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அவர்களால் இந்தியர்கள் போல் வாழ முடியும் என்றார்.

மதுரை உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாசுகி கூறியதாவது: நான் 9 வயதில் இந்தியாவுக்கு அகதியாக வந்தேன். 32 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்கிறேன். சட்டம் படித்துள்ளேன். இந்திய குடியுரிமை இல்லாததால் என்னால் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியவில்லை. குடியுரிமை கேட்டு ஆட்சியர் அலுவலகங்களில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இதுவரை குடியுரிமை கிடைக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x