Published : 14 Nov 2016 03:21 PM
Last Updated : 14 Nov 2016 03:21 PM
பருவநிலை மாற்றம் காரணமாக பிளம்மிங்கோ என்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம், கூட்டமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் குவிந்துள்ளன.
தமிழில் பூநாரை என்று அழைக்கப்படும் கிரேட்டர் பிளம்மிங்கோ பறவைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிளம்மிங்கோ பறவைகள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு வலசை வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பிளம்மிங்கோ பறவை வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. பருவமழைக்கு முந்தைய காலம், பருவமழை காலம் மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலம் என மூன்று காலங்களில் இந்த பறவைகள் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திடீர் அதிகரிப்பு
இது குறித்து பறவை ஆர்வலரும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி விலங்கியல் துறை தலைவருமான கோ.லெட்சுமணன் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பிளம்மிங்கோ பறவைகள் கடந்த சில ஆண்டுகளாக தான் வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வரும் பிளம்மிங்கோ பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள உவர்நீர் ஓடை, உவர்நீர் குட்டை, உவர்நீர் குளம், கழிமுகப் பகுதிகள், சதுப்புநிலக் காடுகள் போன்றவை பிளம்மிங்கோ பறவைகளை கவர்ந்திழுக்கும் பகுதிகளாக உள்ளன.
உணவுகள் அதிகம்
பிளம்மிங்கோவுக்கு தேவையான உணவுகளான நண்டு, இறால், நத்தை, புழுக்கள், பூச்சிகள், கடற்புற்கள், தாவரங்கள், அழுகிய இலைகள், தண்டுகள் போன்றவை இந்த பகுதியில் அதிகம் உள்ளன. எனவே, தான் பிளம்மிங்கோ இந்த பகுதிக்கு வருகின்றன. தங்களது சொந்த நாடுகளில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாகவும் உணவு தேடி இந்த பறவைகள் இங்கே வருகின்றன.
வழக்கமாக குஜராத் மாநில கடற்கரை பகுதிக்கு பிளம்மிங்கோ அதிகம் செல்லும். இந்த ஆண்டு அங்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளதால், அங்கிருந்து இடம்பெயர்ந்து மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளுக்கு வந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல், புன்னக்காயல் சதுப்பு நிலக்காடுகள், வேம்பார், வேப்பலோடை, குளத்தூர், பனையூர், தூத்துக்குடி பகுதியில் உள்ள உவர்நீர் குட்டைகள், ஏரிகள் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள கழிமுக பகுதிகளில் பிளம்மிங்கோ பறவைகளை கூட்டம் கூட்டமாக காண முடிகிறது.
இந்த பறவைகள் கடந்த மாதம் இங்கே வந்துள்ளன. அவைகள் 20 ஆயிரம் இணை (ஜோடி) வரை கொண்ட கூட்டமாக காணப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 200 முதல் 1000 இணை கொண்ட பிளம்மிங்கோ கூட்டங்களே உள்ளன.
அவை வலசை வரும்போது பெரும் கூட்டமாக வந்திருக்கலாம். தூத்துக்குடி கடற்கரைக்கு வந்த பிறகு உணவு தேடி சிறிய சிறிய குழுக்களாக வெவ்வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம்.
200 செ.மீ. உயரம்
பிளம்மிங்கோ பறவைகளின் இறகுகள் வெள்ளை கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும், கால்கள் முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்திலும், அலகுகள் நுனியில் கறுப்பாகவும் காணப்படும். 150 முதல் 200 செ.மீ. உயரம் கொண்டவையாகவும், 2 முதல் 4 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும்.
பிளம்மிங்கோ பறவை இரவு நேரத்தில் தான் இடம் பெயரும். அவைமணிக்கு 480 கி.மீ. வேகம் வரை பறக்கக்கூடியவை. இந்த பறவைகள் வானத்தில் இறக்கைகளை விரித்தவாறு பறக்காமல் அப்படியே நீண்ட நேரம் இருக்கும் வல்லமை கொண்டவை.
பிளம்மிங்கோ இனங்கள் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT