Published : 18 Oct 2022 07:07 PM
Last Updated : 18 Oct 2022 07:07 PM

மாநில எல்லைப் பகுதிகளில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்: ஸ்கேன் மையங்கள் காரணமா? - தமிழக மருத்துவத் துறை ஆய்வு

பிரதிநிதித்துவ படம்

சென்னை: ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது தொடர்பாக தமிழக மருத்துவத் துறைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகித எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய ஒவ்வொரு மாநிலத்தின் வாரியாக குழு அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககம், காவல் துறை அடங்கிய குழுவினர் ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழக எல்லை மாவட்டங்களில், ஆண் குழந்தைகளின் பிறப்பைக் காட்டிலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பிற மாநிலங்களில் செயல்படும் ஸ்கேன் மையங்கள், சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சராசரியாக 1000 ஆண் குழந்தைகளுக்கு 932 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவற்றில் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதற்கு தமிழகம் மற்றும் பிற மாநில எல்லைகளில் செயல்படும் ஸ்கேன் சென்டர்கள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொள்கின்றனர். அவ்வாறு பெண் குழந்தைகள் என்றால் கருகலைப்பு செய்வதால், ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

இவற்றில் பொதுமக்களும் உடந்தையாக இருப்பதால், எங்களுக்கு பெரியளவில் புகார்கள் வருவதில்லை. அதேநேரம், அவ்வப்போது ஆய்வு நடத்துகிறோம். அதன் அடிப்படையில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், மருத்துவம், ஊரக சேவை பணிகள் துறையின் இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்துகின்றனர். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்லும் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் கருகலைப்பில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x