Published : 18 Oct 2022 02:47 PM
Last Updated : 18 Oct 2022 02:47 PM
தருமபுரி: தருமபுரியில் ஆட்சியர் குடியிருப்பு அருகே இயங்கும், நுகர்பொருள் வாணிபக் கழக நெல் குடோனில் ஏற்பட்ட தீ, உடனடியாக அணைக்கப்பட்டதால் 2.50 லட்சம் நெல் மூட்டைகள் தப்பின.
நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அருகே மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தின் பின்புறத்தில் உள்ள வெற்றிலைக்காரன் பள்ளம் என்ற பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழக நெல் குடோன் இயங்குகிறது. தனியாருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு பெற்று இங்கே திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில், உடைக்கப்பட்ட கருங்கற்கள் மீது சவுக்கு மரத் துண்டுகளை குறுக்கு, நெடுக்கில் அடுக்கி மேடை ஏற்படுத்தி அதன்மீது நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பிளாஸ்டிக் தார்பாய்களால் மூடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப அரவை ஆலைகளுக்கு நெல் அனுப்பப்பட்டு அரிசியாக்கப்பட்டு ரேஷன் கடைகள், அரசு விடுதிகள் உள்ளிட்ட அரசு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் அமைக்கப்படும் ஒரு மேடையில் தலா 40 கிலோ எடை கொண்ட 3,000 மூட்டைகள் வீதம் அடுக்கி வைக்கப்படுகின்றன. தற்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் மூட்டைகள் இருப்பில் உள்ளன. இந்நிலையில், இன்று(18-ம் தேதி) காலை இந்த குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு மேடையில் இருந்த மூட்டைகளில் இருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியுள்ளது. குடோனில் காவல் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இதைக் கண்டதும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீப்பற்றிய மேடையில் இருந்த சுமார் 120 மூட்டைகள் தீயில் சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதும், மூட்டைகளுக்குள் மறைவில் தீ மிச்சமிருக்க வாய்ப்பிருக்கும் என்றும், தீப்பற்றிய மேடையில் உள்ள மூட்டைகளை முழுமையாக பிரித்து எடுத்தால், உள்ளே மிச்சமிருக்கும் தீயை முழுமையாக அணைக்க முடியும் என்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிச் சென்றனர்.
அதன்படி, தீப்பற்றிய மேடையில் இருந்த நெல் மூட்டைகளை பிரித்து, தீயில் சேதமான மூட்டைகளை மட்டும் ஒதுக்கிவிட்டு இதர மூட்டைகளை உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பிடவும் தேவையான நடவடிக்கைகளை வாணிபக் கழக அதிகாரிகள் மேற்கொண்டனர். நெல் குடோனில் பற்றிய தீ உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டதால், குடோனில் இருப்பில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மூட்டைகளும் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், குடியிருப்புகள், கிராமம் என எதுவும் இல்லாத, விவசாய நிலங்களுக்கு மத்தியிலுள்ள ஓரிடத்தில் இந்த நெல் குடோன் அமைந்துள்ளது. இதில், நெல் இருப்பில் உள்ள ஒரு மேடையில், அதுவும் சுமார் 30 அடி உயரத்தில் உச்சிப் பகுதியில் உள்ள மூட்டைகளில் மட்டும் எவ்வாறு தீப்பற்றியது என அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கு பின்னால் மர்ம நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று அறிய காவல்துறையில் புகார் அளிக்கவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT