Published : 18 Oct 2022 02:17 PM
Last Updated : 18 Oct 2022 02:17 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பவுடா நிறுவனம் 38-வது ஆண்டு விழா மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழாவில் கலந்துகொண்டு, மூத்த குடிமக்களை கவுரவித்து, அவர்களுக்கு நலவுதவிகளை வழங்கினார். விழாத் தொடக்கத்தில் அங்கு அமர்ந்திருந்த மூத்த குடிமக்களுக்கு ஆளுநர் தலைப்பாகை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பவுடா நிறுவுனத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியார்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: "அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு என்று தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதனை இன்னும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் விரைவுபடுத்துவோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் வீட்டில் உள்ள தாய் தந்தையர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு விட்டார்களா என்பதை அறிந்து அனைவரையும் பூஸ்டர் ரோஸ் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசிடம் தடுப்பூசி இருப்பு இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் தமிழ் மருத்துவக் கல்லூரி கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். முதல்வரோடு ஆலோசனை செய்து குழு அமைக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில், அவர்கள் மொழியில் அமைத்ததைப் போல, புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
முழுமையான தமிழ் வழி கல்லூரி கொண்டுவர முடியவில்லை என்றாலும், இப்போது இருக்கின்ற கல்லூரியிலேயே தமிழ் வழி பாடம் இருக்கும். விருப்பப்பட்டவர்கள் தமிழில் படிப்பதற்கான புத்தகங்கள் தயாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு எவ்வளவு விரைவாக 6 மாதத்துக்குள் மருத்துவக் கல்வி புத்தகங்கள் தமிழில் தயாரிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தொழிற்கல்வியைக் கூட தாய்மொழியில் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்கள். நாம் அதை ஏற்பாடு செய்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. மருத்துவக் கல்வியாக இருக்கட்டும் பொறியல் கல்வியாக இருக்கட்டும் தாய் மொழியில் படிக்கும் பொழுது புரிதல் திறன் அதிகமாக இருக்கும். தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சியும் மருத்துவர் என்ற முறையில் செய்வேன்” என்றுதமிழிசை கூறினார்.
பால் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை கூறியதாவது: "நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் இருக்கிறது. அது சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். நிச்சயமாக அது சரி செய்யப்படும். நாள் ஒன்றுக்கு புதுச்சேரிக்கு 1 லட்சத்து 5000 லிட்டர் தேவைப்படுகிறது. அதில் 25 ஆயிரம் லிட்டர் குறைவாக கிடைத்திருக்கிறது.
பால் கொள்முதல் கர்நாடகாவில் இருந்து செய்து கொண்டிருக்கிறோம். கர்நாடகாவில் அதிக மழை மற்றும் பண்டிகை காலம் காரணமாக 25 ஆயிரம் லிட்டர் இரண்டு நாட்கள் குறைவாக கிடைத்திருக்கிறது. அதை உடனே சரி செய்வதற்கு கர்நாடக அரசிடம் பேசி இருக்கிறார்கள். முதல்வரும், செயலரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உடனடியாக 25 ஆயிரம் தர முடியவில்லை என்றாலும் 10,000 லிட்டர் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மூன்று தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3 தனியார் நிறுவனங்களிடமிருந்தும் 5,000 லிட்டர் வந்தால் பால் பற்றாக்குறை தீர்ந்துவிடும். மக்களுக்கான எந்த பிரச்சினையும் உடனே சரி செய்யப்படும். எப்படி மின் தடை வரும்போது உடனே சரி செய்தோமோ, அதைப்போல மக்கள் துன்பப்படுவதற்கு விட மாட்டோம் என்பதைத்தான் முதல்வரும், நானும் கூறி கொள்ள விரும்புகிறோம்" என்று தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT