Published : 18 Oct 2022 12:45 PM
Last Updated : 18 Oct 2022 12:45 PM
சென்னை: ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் கடந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த அறிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பரிந்துரைகள் அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் நாட்டின் பன்மொழி கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் முதல்வர் விமர்சித்திருந்தார். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இந்த பரிந்துரைகள் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழினத்தைத் தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அமித் ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது" இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...