Published : 18 Oct 2022 01:43 AM
Last Updated : 18 Oct 2022 01:43 AM
மதுரை: தென்னக ரயில்வேயில் மதுரை-சென்னை வைகை விரைவு ரயில்சேவை 15.8.1977 தொடங்கப்பட்டது. மதுரை-சென்னை இடையிலான 497 கி.மீ. தூரத்தை 7 மணி 5 நிமிடத்தில் சென்றடைந்தது சாதனையாக இருந்தது. மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். சென்னையை சென்றடைய வழக்கமாக 7 மணி 20 நிமிடங்கள் ஆகும்.
ஆனால் கடந்த மார்ச் 3-ல் வைகை ரயில் சில தொழில்நுட்பக்கோளாறால் மதுரையிலிருந்து 21 நிமிடம் தாமதமாக புறப்பட்டபோதும், 6 மணி 40 நிமிடங்களில் சென்னையை சென்றடைந்ததில் 44 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது. இப்போது இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை ரயில் நிலையத்தில் வைகை ரயில் புறப்படுவதில் 30 நிமிடம் தாமதமானது. 30 நிமிடங்கள் தாமதமான போதிலும், ரயிலை இயக்கிய லோகோ பைலட் ஏ.எம்.எம்.ரவிசங்கர் உதவி லோகோ பைலட் கே. முத்துக்குமார் ஆகியோர் ரயிலை வேகமாக இயக்கினர். இதனால் விழுப்புரத்துக்கு வரும்போது 9 நிமிட தாமதமாக குறைத்தனர்.
மதுரை மற்றும் விழுப்புரம் இடையே பல்வேறு ரயில்வே பணிகள் நடைபெறுவதால், மூன்று வழித்தடங்களில் மணிக்கு 20 கிமீ மற்றும் 45 கிமீ வேகக் கட்டுப்பாடுகள் உள்ளன. இருந்தபோதிலும் ரயிலை வேகமாக இயக்கி, 9 நிமிட தாமதமாக இதை குறைத்தனர்.
விழுப்புரத்தில் மற்ற லோகோ பைலட் குழு பொறுப்பேற்றதும் அவர்களும் ரயிலை வேகமாக இயக்கினர். இதனால், 2.30க்கு செல்ல வேண்டிய ரயில் 2.14 மணிக்கே சென்னை எழும்பூரை சென்றடைந்தது. இதன்மூலம் 11 நிறுத்தங்களை கொண்ட 497 கிமீ தூரத்தை 6.34 மணி நேரத்தில் கடந்து வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சாதனை படைத்தது.
இதில் இன்னொரு சாதனை, 22 பெட்டிகள் கொண்ட வைகை ரயில் இரண்டு முறை இந்த சாதனையை செய்யும்போது அதை இயக்கியவர் லோகோ பைலட் ஏ.எம்.எம்.ரவிசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை-மதுரை மார்க்கத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலே அதிவேகமாக செல்லக்கூடிய ரயிலாக அறியப்படுகிறது. தேஜஸ் 6.15 மணி நேரத்தில் இந்த 497 கிமீ தூரத்தை கடக்கிறது. வெறும் 4 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. ஆனால், வைகை எக்ஸ்பிரஸை பொறுத்தவரை 11 நிறுத்தங்களில் நின்றபோதும் 6.34 நிமிடங்களில் 497 கிமீ தூரத்தை கடந்து தேஜஸ் ரயிலுக்கு டப் கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT